Home » கன்னியாகுமரி செய்திகள் » கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் மறைசாட்சி தேவசகாயம் நினைவு தினம்
202101130912236233_Tamil_News_tamil

கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் மறைசாட்சி தேவசகாயம் நினைவு தினம்

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய அருட்பணி பேரவையில் 23-வது பொதுக்குழு கூட்டம் தலைவர் ஸ்டான்லி சகாய சீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் பொங்கல் விழா நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு திருப்பலியுடன் தொடங்குகிறது. இதில் கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் ஏஞ்சலூஸ், பங்குதந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்குதந்தை ஜார்ஜ் கபிரியேல் கிஷோர் ஆகியோர் பொங்கல் விழா திருப்பலி நிறைவேற்றுகின்றனர். தொடர்ந்து திருப்பலி முடிந்ததும் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்படுகிறது.குமரி மாவட்ட மண்ணின் மறைசாட்சி என அழைக்கப்படும் தேவசகாயத்தின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14-ந்தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தேவசகாயம் இயேசு கிறிஸ்துவை பின்பற்றியதற்காக பல துன்பங்களை சந்தித்தார். 1752-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் திருவிதாங்கூர் மன்னராட்சியின் போது ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி மறைசாட்சியானார். கோட்டார் மறைமாவட்டம் இவரது மறைசாட்சி தினத்தை ஆண்டுதோறும் நினைவு கூர்ந்து வருகிறது. மேலும், உலக திரு அவை இவரை முத்திபேறு ஏற்றுக்கொண்டு அருளாளர் என்று அறிவித்தது.

இந்த ஆண்டு அருளாளர் தேவசகாயம் மறைசாட்சி தினம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட கோட்டார் புனித சவேரியார் பேராயத்தில் மறைசாட்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க கோட்டார் மறைமாவட்டத்தின் பல பங்குகளில் இருந்தும் இறைமக்கள், குருக்கள் வருகை தருகிறார்கள். விழாவில் நாளை மாலை 5 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மிக விரைவில் புனிதர் பட்டம் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் இவ்விழா முக்கியத்துவம் வாய்ந்ததாக கொண்டாடப்பட உள்ளது.

கோட்டார் மறை மாவட்டத்தின் மறைந்த முன்னாள் ஆயர் லியோன் தர்மராஜின் 14-ம் ஆண்டு நினைவு தினம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கோட்டார் சவேரியார் ஆலயத்தில் வருகிற 16-ந்தேி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அன்று காலை 6.15 மணிக்கு ஆயர் தலைமையில் திருப்பலி, கல்லறை மந்திரிப்பு தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆலய வளாகத்தில் சமபந்தி விருந்து ஆகியவை நடைபெறுகிறது.

இந்த முப்பெரும் விழாவில் மறைமாவட்ட இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கோட்டார் சவேரியார் பேராலய அருட்பணி பேரவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.முடிவில் அருட்பணி பேரவை செயலாளர் அந்தோணி சவரிமுத்து நன்றி கூறினார்.