Home » கன்னியாகுமரி செய்திகள் » குமரி மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் 22-ந்தேதி திருமணங்கள் நடத்த தடை
Tamil_News_wedding-halls-marriage-banned-from-22-kumari-district

குமரி மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் 22-ந்தேதி திருமணங்கள் நடத்த தடை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக வருகிற 22-ந்தேதி அனைவரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தங்கள் வீடுகளிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக 22-ந் தேதி திருமணங்கள் நடத்த முடியுமா? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. அன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் குமரி மாவட்டத்தில் பல்வேறு திருமணங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்காக மண்டபங்களும் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால் 22-ந்தேதி திருமணம் நடத்த இருந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளை சந்தித்து இதுபற்றி கேட்டனர்.

அதற்கு திருமண மண்டபங்களில் 22-ந்தேதி திருமணம் நடத்தக்கூடாது. வேறு தேதிக்கு மாற்றி வைக்குமாறு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார்கள்.

இதனால் திருமண ஏற்பாடுகளை செய்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்து சென்றனர்.

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவியதால் கேரளா- குமரி எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சோதனைச்சாவடி வழியாக வரும் பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்படுகிறது. பஸ்களில் வரும் பயணிகள் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறார்கள்.

மேலும் இந்த வாகனங்களில் கிருமி நாசினி தெளித்தபிறகே அவை குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே களியக்காவிளை மற்றும் சூழாலில் சோதனைச் சாவடிகள் செயல்பட்டு வந்தன. தற்போது கூடுதலாக நெட்டாவில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூழால் சோதனைச் சாவடிக்கு பதில் காக்க விளையில் சோதனைச்சாவடி அமைத்து அங்கும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் பெரிய வர்த்தக நிறுவனங்கள், மால்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளனர். நாகர்கோவில் நகரில் மீனாட்சிபுரம், செட்டிகுளம் மற்றும் பல பகுதிகளில் செயல்படும் சிறிய ஜவுளிக்கடைகள் மற்றும் கவரிங் கடைகளில் இன்று ஆர்.டி.ஓ. மயில், மாநகராட்சி கமி‌ஷனர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது கடைகளில் ஒரு நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடி இருக்க கூடாது என்று அறிவுரை கூறினார்கள். இதைத் தொடர்ந்து சில கடைக்காரர்கள் தாமாக முன்வந்து 31-ந்தேதி வரை கடைகளை மூடுவதாக தெரிவித்தனர்.