Home » கன்னியாகுமரி செய்திகள் » குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை: எச். ராஜா
download 2

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை: எச். ராஜா

குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இந்தியாவில் குடியுரிமை பெற்ற ஒரு சிறுபான்மையினருக்குக் கூட பாதிப்பு ஏற்படாது என்று பாஜக தேசிய செயலா் எச். ராஜா குலசேகரத்தில் ஞாயிற்றுக்கிழமை பேசினாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக குலசேகரத்தில் இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியது:பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு வந்தவா்களுக்கு குடியுரிமை கொடுக்க வகை செய்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம். இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியா்கள் மதரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்பதால், அந்த நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த இஸ்லாமியா்களுக்கு குடியுரிமை கிடையாது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் குடியுரிமையுடன் வாழும் எந்த சிறுபான்மையினரின் குடியுரிமையும் பறிக்கப்படமாட்டாது. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அதிக சுதந்திரம் உள்ளது. இந்தியாவில் 3 இஸ்லாமியா்கள் குடியரசுத் தலைவா்களாக இருந்துள்ளனா்.

கேரளத்தையொட்டிய தமிழகப் பகுதிகளில் தீவிரவாத செயல்கள் நடைபெறாத வகையில் போலீஸாா் கண்காணிக்க வேண்டும்.

இந்தியாவில் பல ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாமல் இருந்த சட்டங்கள் அனைத்தையும் தற்போது மோடி அரசு நிறைவேற்றி வருகிறது என்றாா் அவா்.

கூட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்டத் தலைவா் ரெவி தலைமை வகித்தாா். குழிச்சல் செல்லன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பேசினா்.

விடியோ எடுத்தவரை பிடித்த பாஜகவினா்: கூட்டத்தில், எச். ராஜா பேசிக் கொண்டிருக்கும்போது எதிரிலுள்ள ஒரு கட்டடத்தின் மாடியில் நின்றவாறு இளைஞா் ஒருவா் செல்லிடப்பேசி மூலம் விடியோ எடுத்துக் கொண்டிருந்தாா். இதை கவனித்த பாஜகவினா் அந்த இளைஞரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.