Home » விளையாட்டுச்செய்திகள் » தொடக்க வீரர்கள் சொதப்பல்: பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி 263 ரன்னில் ஆல்-அவுட் விஹாரி சதம் அடித்தார்
In-coaching-cricket-Indian-team-allout-in-263-runs-Vihari

தொடக்க வீரர்கள் சொதப்பல்: பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி 263 ரன்னில் ஆல்-அவுட் விஹாரி சதம் அடித்தார்

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 21-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கு முன்பாக 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து லெவன் அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. இது பயிற்சி மோதல் என்பதால் 16 வீரர்களில் 11 பேரை மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்கள் வரிசைக்கு மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சுப்மான் கில் ஆகியோர் இடையே கடும் போட்டி உருவாகியுள்ள நிலையில், அவர்கள் பயிற்சி களத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.

ஆடுகளத்தில் புற்கள் கணிசமான அளவில் இருந்தது. இதனால் பந்து நன்கு பவுன்சும், ஸ்விங்கும் ஆனது. நியூசிலாந்து பவுலர்களின் வேகத்துடன் கூடிய பவுன்ஸ் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இளம் வீரர்கள் பிரித்வி ஷா (0), மயங்க் அகர்வால் (1), சுப்மான் கில் (0) வரிசையாக நடையை கட்டினர். இந்த 3 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குஜ்ஜெலின் கபளகரம் செய்தார். குறிப்பாக ஷாட்பிட்ச் யுக்தியை சமாளிப்பது முக்கியம் என்று முந்தைய நாள் ஆரூடம் சொன்ன சுப்மான் கில் கடைசியில் அந்த வகை பந்து வீச்சுக்கே இரையானார். துணை கேப்டன் ரஹானேவும் (18 ரன்) நிலைக்கவில்லை.

இந்திய அணி 38 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த நிலையில், 5-வது விக்கெட்டுக்கு புஜாராவும், ஹனுமா விஹாரியும் ஜோடி சேர்ந்து சரிவில் இருந்து காப்பாற்றினர். இவர்கள் 5-வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் திரட்டினர். அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்த புஜாரா 93 ரன்களில் (211 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.

இன்னொரு பக்கம் சுழற்பந்து வீச்சாளர் ரச்சின் ரவிந்திராவின் ஓவரில் மொத்தம் 3 சிக்சர்களை பறக்க விட்டு அசத்திய ஹனுமா விஹாரி சதம் விளாசி (101 ரன், 182 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) ‘ரிட்டயர்ட்ஹர்ட்’ ஆகி வெளியேறினார்.

பின்வரிசையில் இறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் (7 ரன்), ஆர்.அஸ்வின் (0), விருத்திமான் சஹா (0), ரவீந்திர ஜடேஜா (8) ஆகியோரும் சொதப்பினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 78.5 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி கடைசி 30 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்குக்கு வராமல் ஒதுங்கி இருந்தார்.

நியூசிலாந்து லெவன் தரப்பில் குஜ்ஜெலின், சோதி தலா 3 விக்கெட்டுகளும், ஜாக் கிப்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்த இந்திய வீரர் 26 வயதான ஹனுமா விஹாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு பேட்ஸ்மேனாக, எந்த வரிசையிலும் களம் இறங்க தயாராக இருக்கிறேன். இப்போது வரைக்கும் என்னிடம் அணி நிர்வாகம் தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அணி நிர்வாகத்துக்கு நான் தொடக்க வீரராக தேவைப்பட்டால் அதற்கும் தயாராக உள்ளேன்.

இந்த பயிற்சி ஆட்டத்தில் தொடக்கத்தில் பந்து அதிகமாக எகிறுவதை கண்டு ஆச்சரியமடைந்தேன். ஏனெனில் இங்கு நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக விளையாடிய போது காலையில் பந்து இந்த அளவுக்கு பவுன்ஸ் ஆகவில்லை. ஆனால் இங்குள்ள சீதோஷ்ண நிலையில் நானும், புஜாராவும் சமாளித்து நிலைத்து நின்ற பிறகு, நீண்ட இன்னிங்ஸ் ஆடுவது அவசியம் என்பதை புரிந்து அதற்கு ஏற்ப செயல்பட்டோம். டெஸ்ட் போட்டிகளுக்கும் இத்தகைய தன்மை கொண்ட ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் நியூசிலாந்தின் பிரதான பலமே வேகப்பந்து வீச்சு தான். அவர்களிடம் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதே சமயம் கடினமான சூழலில் இங்கு நிலைத்து நின்று ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

டெஸ்ட் தொடருக்கு முன்பாக நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. இந்த ஆடுகளத்தில் கவனித்து விளையாடு, நிறைய பந்துகளை தொடாமல் விட்டு விடு, அப்போது தான் எளிதாக இருக்கும் என்று புஜாரா ஆலோசனை வழங்கினார். அதன்படியே விளையாடியதால் சதம் அடிக்க முடிந்தது. இவ்வாறு விஹாரி கூறினார்.