Home » கன்னியாகுமரி செய்திகள் » திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலை மீட்பு கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது
Four-persons-including-husband-and-wife-arrested-for

திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலை மீட்பு கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற மகாதேவர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவில் குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் 2-வது கோவிலாகும்.

இத்தகைய சிறப்புமிக்க மகாதேவர் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அங்கிருந்த 1 அடி உயரமுள்ள ஐம்பொன் சிலை, நகைகள்,சுவாமியின்திருமுகம், பிறை வடிவிலான 12 சந்திரகலா, திருவாச்சி பிரவையை கொள்ளையடித்தனர். மேலும் உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையை அரங்கேற்றிய மர்ம நபர்கள், அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கோவிலில் உள்ள சாமி சிலையையும் தூக்கி சென்றனர்.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ஆனால் இந்த கொள்ளையில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறினர். இதற்கிடையே மகாதேவர் கோவிலில் ெகாள்ளையடிக்கப்பட்ட சிலையை மீட்க கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் 16 மாதங்களுக்கு பிறகு இந்த கொள்ளையில் போலீசாருக்கு துப்பு கிடைத்தது. கேரளாவை சேர்ந்த கும்பல் தான் கோவிலில் ஐம்பொன் சிலையை கொள்ளையடித்ததாக பரபரப்பு தகவல் வெளியானது.

அதாவது, விஜயன் தலைமையிலான போலீசார் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷாநவாஸ் என்ற முகமது அப்சல் (வயது 35) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் மகாதேவர் கோவிலில் நடந்த கொள்ளையில் ஷாநவாஸ் தான் முக்கிய நபர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தியதில், கொள்ளையடித்த முழு விவரத்தையும் போலீசாரிடம் தெரிவித்தார்.

ஷாநவாஸின் சொந்த ஊர் குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம். திருமணத்துக்கு பிறகு திருவனந்தபுரத்தில் குடியேறிய அவர் மனைவியுடன் அங்கேயே வசித்து வந்துள்ளார். இதற்கிடையே ஷாநவாசுக்கு, நெய்யாற்றின்கரையை சேர்ந்த சுமிதா (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஷாநவாஸ், மகாதேவர் கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டார். இதற்கு திருவனந்தபுரத்தை சேர்ந்த உசைன் (37), மார்த்தாண்டம் மாங்கரையை சேர்ந்த இயேசுதாஸ் ஆகியோரின் உதவியை நாடினார். அதே சமயத்தில், கணவரின் இந்த ஆசையை நிறைவேற்ற அவருடைய 2-வது மனைவி சுமிதாவும் அவருக்கு பக்கபலமாக இருந்தார்.

கொள்ளையை அரங்கேற்றுவதற்காக, சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்பாக திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு 4 பேரும் காரில் வந்துள்ளனர்.

பின்னர் குடும்பமாக சென்று கோவிலில் தரிசனம் செய்வது போல், அங்குள்ள சாமி சிலைகள் மற்றும் பாதை விவரங்களை பார்த்து, அனைத்து இடங்களையும் நோட்டமிட்டனர். கோவிலில் உள்ள பாதுகாப்பு வசதியை பார்வையிட்ட அவர்கள், கொள்ளையடித்து விட்டு எந்த வழியாக தப்புவது என்பதை முன்கூட்டியே முடிவு செய்தனர். அங்கு பாதுகாப்பில் குளறுபடி இருப்பதை கண்டறிந்த கும்பல், திட்டத்தை சுலபமாக அரங்கேற்றி விடலாம் என்று நினைத்தனர்.

அதன்படி கோவிலின் பூட்டை உடைத்து 4 பேரும் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த பணம் உண்டியலில் இல்லை. ரூ.5 ஆயிரம் மட்டுமே இருந்ததாக தெரிகிறது. இதனால் கோவிலில் வேறு ஏதேனும் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கிறதா? என்று ேநாட்டமிட்ட போது சிலையை கொள்ளையடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.

உடனே ஐம்பொன்னால் ஆன 1 அடி உயர உற்சவர் சிலை, 1 பவுன் சுவாமி நகைகள் உள்ளிட்ட சுவாமியின் அலங்கார பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். செல்லும் வழியில் அருகில் உள்ள கோவிலில் இருந்த சிலையையும் தூக்கிச் சென்று காரில் தப்பி விட்டனர்.

பின்னர் சாமி சிலைகள், நகையை ஷாநவாஸ் திருவனந்தபுரத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் வைத்திருந்தார். தொடர்ந்து சிலையை விற்பதற்காக நெய்யாற்றின்கரையை சேர்ந்த சதீஷ்பாபு (39) என்பவரின் உதவியை நாடினார். அவர் மூலம் வெளிநாட்டுக்கு சிலையை கடத்தி சென்று விற்கலாம் என்று திட்டமிட்ட நிலையில் ஷாநவாஸ் போலீசின் பிடியில் சிக்கி கொண்டார்.

தொடர்ந்து ஷாநவாஸ் கொடுத்த தகவலின் பேரில் அவரது 2-வது மனைவி சுமிதா, உசைன், சதீஷ்பாபு ஆகியோரும் போலீசிடம் சிக்கினர். இதனையடுத்து 4 பேரையும் கைது செய்து 2 சிலைகள், நகையை மீட்டனர். மாங்கரை இயேசுதாஸ் ஏற்கனவே வேறொரு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

16 மாதத்திற்கு பிறகு திக்குறிச்சி மகாதேவர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் பிடிபட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.