Home » வர்த்தகம் செய்திகள் » 4ஜி பஞ்சாயத்தே இன்னும் முடியல.. அதுக்குள்ள 6ஜியா..?
airtel-4g

4ஜி பஞ்சாயத்தே இன்னும் முடியல.. அதுக்குள்ள 6ஜியா..?

இன்று இந்தியாவில், அமேசான் ப்ரைம், நெஃப்ளிக்ஸ், ஜி5, டிக் டாக், பப்ஜி, ஸ்விக்கி, சொமாட்டோ என பல ஆன்லைன் நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை சிறப்பாக செய்ய முடிகிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம்… இணையம் தான். இந்தியாவில் இணையத்தை சகாய விலைக்கு கிடைக்க சகாயம் செய்தது ஜியோ தான். என்றாலும், அந்த விலைப் போட்டியால் ஏர்டெல், வொடாபோன் , ஐடியா, பி எஸ் என் எல் என எல்லா டெலிகாம் நிறுவனங்களுமே ஸ்தம்பித்துவிட்டதை நாம் கண் கூடாகப் பார்த்து வருகிறோம். ஜியோ வருவதற்கு முன் ஓரளவுக்காவது லாபத்தில் இயங்கிக் கொண்டு இருந்த டெலிகாம் நிறுவனங்கள் எல்லாம் ஓவர் நைட்டில் நடுத்தெருவுக்கு வந்துவிட்டன.

சமீபத்தில் கூட ஏர்டெல் நிறுவனம் 25,000 கோடி ரூபாயை ரைட்ஸ் பங்குகளை வெளியிட்டு திரட்டியது நினைவில் இருக்கலாம். அந்த பணத்தை வைத்து ஏர்டெல் புதிய சேவைகளை எல்லாம் தொடங்கவில்லை. தன்னுடைய 4ஜி சேவையை விரிவாக்கிக் கொண்டது. இப்படி விரிவாக்கப் பணிகளுக்கே இத்தனை கோடிகள் என்றால், புதிய டெக்னாலஜிகளுக்கு எவ்வளவு செலவழிக்க வேண்டி இருக்கும் என்று நீங்களே கணக்கு போட்டுப் பாருங்கள்.

இந்த சிக்கல் போக, ஐயூசி என்கிற Interconnect Usage Charges பஞ்சாயத்துப் பிரச்னைகள் வேறு. ஜியோ நிறுவனம் ஐயூசி கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்கிறது. ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா போன்ற நிறுவனங்களோ ஐயூசி வசூலிக்க வேண்டும் என போராடிக் கொண்டு இருக்கிறார்கள். காரணம் ஐயூசி ஜியோவுக்கு நஷ்டம். ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியாவுக்கு லாபம்.

ஐயூசி பஞ்சாயத்துடனேயே தொடர்புடைய, ரிங்கிங் டைம் பஞ்சாயத்து வேறு நடந்தது. அனைத்து நெட்வொர்க்குகளும் மொபைல் ஃபோன்களுக்கு 30 நொடி ரிங்கிங் நேரத்தை நிர்ணயித்து டிராய். ரிங்கிங் டைம் பஞ்சாயத்துக்கு ஓரளவுக்கு முடிவு கண்டிருக்கிறது. இதை எல்லாம் விட, ஜியோவின் அசுர வளர்ச்சி. சகட்டு மேனிக்கு ஆஃபர்.

சில வருடங்களுக்கு முன் ஒரு ஜிபி டேட்டா சுமாராக 150 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த காலம் போய்.. இப்போது அதே 150 ரூபாய்க்கு ஒரு நாளுக்கு 1 ஜிபி டேட்டா + வாய்ஸ் கால் + 100 எஸ் எம் எஸ் என 30 நாட்களுக்கு வழங்கி வருகிறார்கள் டெலிகாம் நிறுவனங்கள். இதில் பாரபட்சமே கிடையாது. அதற்கு முழு முதல் காரணம் ரிலையன்ஸ் ஜியோ மட்டும் தான்.

மத்திய அரசின் டெலிகாம் துறைக்கும், இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கும் இடையில் நடந்த 14 ஆண்டு காலமாக நடந்து வந்த வழக்குக்கு தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பில், அரசின் டெலிகாம் துறை கேட்கும் லைசென்ஸ் கட்டணங்கள் சரியானது தான். டெலிகாம் நிறுவனங்கள் சுமார் 92,600 கோடி ரூபாயை அரசுக்குச் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். அத்தனை பலமான அடிகள்.

மேலே சொன்னது போல, ஜியோவின் அதிரடி எண்ட்ரி, தொடர்ந்து ரீசார்ஜ் பேக்குகளின் விலை குறைப்பு, ரிங்கிங் டைம் பிரச்சனை, ஐயூசி கட்டண பஞ்சாயத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு என எல்லாம் சேர்த்து டெலிகாம் துறையை கடுமையான நஷ்டத்தில் தள்ளி இருக்கிறது. எவ்வளவு நஷ்டம் தெரியுமா..? செப்டம்பர் 2019 காலாண்டில் ஏர்டெல் – 23,000 கோடி ரூபாய், வொடாபோன் ஐடியா – 50,000 கோடி ரூபாய் நஷ்டம் என கணக்கு காட்டினார்கள்.

இத்தனை கொடூரமான நஷ்டங்கள் ஏற்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் கூட, அடுத்த தலை முறை டெலிகாம் தொழில் நுட்பங்களான 5ஜி மற்றும் 6ஜி ஆராய்ச்சிகளும் மறு பக்கம் கலைகட்டிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த ஆராய்ச்சியின் முனையில் இந்திய டெக்னாலஜி கம்பெனிகளில் ஒன்றான டெக் மஹிந்திரா..!

இந்தியாவின் டெக் மஹிந்திரா நிறுவனம், பிசினஸ் ஃபின்லாந்து என்கிற நிறுவனத்துடன், ஐந்தாம் தலை முறை அலைக் கற்றை மற்றும் ஆறாம் தலை முறை அலைக் கற்றை குறித்து ஆராய்ச்சி செய்ய ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம். இந்த ஒப்பந்தத்தைக் குறித்து நேற்றே டெக் மஹிந்திரா உறுதி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலே சொன்ன ஒப்பந்தப் படி, இரு நிறுவனங்களும் இணைந்து 5ஜி / 6ஜி கண்டுபிடிப்பு ஹப்பை (Innovation Hub) ஃபின்லாந்தில் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய்வதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆக இன்னும் இந்தியாவில் 4ஜி சேவையையே முழுமையாக கொண்டு வரவில்லை, VOLTE வைத்து தான் ஒப்பேத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அதற்குள் 5ஜி, 6ஜிக்கு ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிட்டோம். எப்படி இருந்தால் என்ன..? இந்திய நிறுவனம் 5ஜி அல்லது 6ஜி தொழில்நுட்பத்தைக் கண்டு பிடித்தால் சரி..! அட்வான்ஸ் வாழ்த்துக்கள் டெக் மஹிந்திரா..!