Home » கன்னியாகுமரி செய்திகள் » குமரியில் 42 மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு
202104070153274478_Disorder-in-the-voting-machines_SECVPF

குமரியில் 42 மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு

குமரி மாவட்டத்தில் 42 மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சில மையங்களில் 1 மணி நேரத்துக்கும் மேல் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

குமரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும், 6 சட்டசபை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்காக மாவட்டம் முழுவதும் 2,243 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெற்றது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்காளர்கள் குடும்பம், குடும்பமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள், காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். அதே சமயத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள சில வாக்குச்சாவடிகளில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் 1 மணி நேரத்துக்கும் மேலாக சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
அந்த வகையில் நாகர்கோவில் அருகே சீதப்பால் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 8 மணிக்கு அங்கிருந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரம் கொண்டுவரப்பட்டது. இதனால் அங்கு 1 மணி நேரம் வரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
இதேபோல் ஆரல்வாய்மொழி அருகே மாதவலாயம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கான 61-வது வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதைதொடர்ந்து, அதிகாரிகள் வேறு வாக்குப்பதிவு எந்திரத்தை கொண்டு வந்து பொருத்தினர். இதனால் அங்கு 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண் 75-ல் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியபோது எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மாற்று எந்திரம் ெகாண்டுவரப்பட்டு 1¼ மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
இதேபோல் பள்ளம் தூய மேத்யூஸ் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்தது. இதனைதொடர்ந்து மாற்று வாக்குப்பதிவு எந்திரம் கொண்டுவரப்பட்டு, ஓட்டுப்பதிவு நடந்தன. மேலும் திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி எண் 73, குளச்சல் தொகுதி வாக்குச்சாவடி எண் 201, ஆலன்விளை அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண் 203, கொடுப்பைகுழி அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண் 257, இரணியல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண் 265 மற்றும் 268, பேயன்குழி அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண் 278, வில்லுண்ணிகோணம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி, வில்லுக்குறி அரசு நடுநிலைப்பள்ளி உள்ள ஆண்கள் வாக்குச்சாவடி உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 42 இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்து, மாற்று எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததும், அவற்றை உடனே அதிகாரிகள் சீர் செய்ததும் குறிப்பிடத்தக்கது.