பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » தமிழகச் செய்திகள் » தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்; மக்கள் ஊரடங்கையொட்டி பஸ்-ரெயில்கள் நாளை ஓடாது
Coronavirus-prevention-in-Tamil-Nadu-bustrains-will-not

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்; மக்கள் ஊரடங்கையொட்டி பஸ்-ரெயில்கள் நாளை ஓடாது

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது பற்றியும், இந்த விஷயத்தில் மக்கள் அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாகவும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

அப்போது, மக்கள் தங்களை தனிமைப் படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும், எனவே நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் பஸ்-ரெயில்கள் ஓடாது என்றும், மார்க்கெட்டுகள், கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோளின்படி நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்துக்கழகங்களின் பஸ்கள் எதுவும் ஓடாது என்றும், மெட்ரோ ரெயில்களும் அன்றைய தினம் இயங்காது என்றும் கூறி உள்ளார்.

இந்தியா முழுவதும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நாளை ரத்து செய்யப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் உள்ள முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது.

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் நாளை இரவு 10 மணி வரை பயணிகள் ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்றும், நாளை அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை புறப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் நெடுந்தூர ரெயில்கள் அனைத்தும் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்து இருக்கிறது. மேலும் சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்கள் மிக குறைவாகவே இயக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரின் அறிவிப்பை ஏற்று தமிழகம் எங்கும் வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து கொரோனா குறித்த விழிப்புணர்வை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றும், தொலைபேசி வாயிலாக பொருட்களின் பட்டியலை அளிக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வீடு தேடிச் சென்று கடை ஊழியர்கள் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

“வணிகர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முழு கடையடைப்பு செய்து, அனைவரும் வீட்டிலேயே இருந்து கொரோனா வைரஸ் தடுப்புக்காக நமது மேலான பங்களிப்பை நம் தேசத்திற்கு அளிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

இதேபோல் நாளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்படுவதாக சிறு, மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறி உள்ளார்.

நாளை அனைத்து உணவகங்களுக்கும் விடுமுறை அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்த சாலைகளில் அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றிவரும் வாகனங்கள், இதர சரக்கு வாகனங்கள், தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் அரசு பஸ்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு கூறி உள்ளது.