பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » கன்னியாகுமரி செய்திகள் » ரேஷன் பொருட்கள் குறைப்பை கண்டித்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் காங்கிரசார் உள்ளிருப்பு போராட்டம் எம்எல்ஏக்கள் பங்கேற்பு
download 3

ரேஷன் பொருட்கள் குறைப்பை கண்டித்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் காங்கிரசார் உள்ளிருப்பு போராட்டம் எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ரேஷன் பொருட்கள் குறைப்பை கண்டித்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நேற்று காங்கிரஸ் சார்பில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில் எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் ரேஷன் பொருள்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து நேற்று வட்ட வழங்கல் அலுவலகங்களில் காங்கிரஸ் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமையில் போராட்டம் நடந்தது. வட்டார தலைவர் டென்னிஸ், சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோபின்சிறில், கருங்கல் நகர காங்கிரஸ் தலைவர் பிரேம்சிங், ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கேதன் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ஆஸ்கர்பிரடி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜேஷ், நிர்வாகிகள் சுரேஷ் கியூபர்ட்ராஜ், சதீஷ், சாலமன்துரை, அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அங்கு குளச்சல் ஏஎஸ்பி பிரவேஸ்சாஸ்திரி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கிள்ளியூர் தாசில்தார் கோலப்பன், ஏஎஸ்பி ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவகுமாரிடம் விவரம் தெரிவிக்கப்பட்டது. அவர், இந்த மாதம் முதல் தடையின்றி பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் தாலுகா அலுவலக நோட்டீஸ் போர்டில் ஒட்டப்படும். மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒட்டப்படும் என தெரிவித்தார். இதையடுத்து 2 மணி நேரமாக நடந்த உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்திற்கு பின்னர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ கூறியதாவது: ஏழைகளுக்கு முறையாக பொருட்கள் வழங்கப்படுவதில்லை. பருப்பு வகைகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகள் 5 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. என்பிஹெச்ஹெச் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள தகுதியான பயனாளிகள் குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்தி அனைவரையும் பிஹெச்ஹெச் வரம்பில் கொண்டு வரவேண்டும். ரேஷன்கடைகளில் 20 சதவிகிதம் மக்கள் பொருட்கள் வாங்குவதில்லை, அந்த பொருட்களை குறைத்திருப்பதாக கூறுகின்றனர். ஒரு மாதம் வாங்காவிட்டால் அடுத்த மாதம் வங்குவார்கள். இதனை கருத்தில் கொண்டு இனி குறைகளை நிவர்த்தி செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த முறை மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

இதுபோல் தக்கலையில் உள்ள கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்துக்கு பிரின்ஸ் எம்எல்ஏ தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் தம்பி விஜயகுமார், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் லாறன்ஸ், மேற்கு மாவட்ட துணை தலைவர் ஜோண்ஸ் இம்மானுவேல், செயலாளர்கள் புரோடிமில்லர், வின்சென்ட்ராஜா, கிழக்கு மாவட்ட துணை தலைவர் மகேஷ்லாசர், பத்மநாபபுரம் நகர தலைவர் ஹனுகுமார், டாக்டர் பினுலால்சிங், சேம்செல்வகுமார், யூசுப்கான், தக்கலை தெற்கு வட்டார தலைவர் டென்னிசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக வட்ட வழங்கல் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வட்ட வழங்கல் அலுவலர் சரளாவிடம் உணவு பொருட்கள் குறைத்து வழங்குவது குறித்து ஆட்சேபனைகளை எழுப்பியதுடன், ஒதுக்கீட்டை குறைக்காமல் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்ட வழங்கல் அலுவலர் சரளா, தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் ஆகியோர் பேச்சு நடத்தினர். ஒதுக்கீடு குறைக்காமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

இது தொடர்பாக பிரின்ஸ் எம்எல்ஏ கூறுகையில், ரேஷன் கடைகளுக்கு 10 சவீதம் முதல் 30 சதவீதம் வரை உணவு பொருட்கள் குறைவாக ஒதுக்கீடு செய்து வழங்குகின்றனர். இதனால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் உணவு பொருட்கள், மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை. இந்த அரசு மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து மக்களிடம் விளையாடுகிறார்கள். ஏழைகள் வாழக்கூடாது என நினைக்கிறார்கள். கோடீஸ்வரர்கள் வாழ வேண்டும் என மறைமுகமாக திட்டமிடுகின்றனர். காங்கிரஸ் அரசு காலத்தில் அரிசியை இலவசமாக கொடுத்தோம். இந்த போராட்டத்தின் போது அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி முழு ஒதுக்கீடு வழங்குவோம் என உறுதி மொழி கூறியுள்ளனர். இல்லையெனில் உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிடுவதுடன் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்வோம் என்றார். குலசேகரம்: திருவட்டார் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்திற்கு திருவட்டார் கிழக்கு வட்டார தலைவர் ஜெகன்ராஜ் தலைமை வகித்தார். மேற்கு வட்டார தலைவர் காஸ்ட்டன் கிளிட்டஸ், மாநில பொதுகுழு உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட துணை தலைவர் ராஜரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு வட்டார பொருளாளர் ஜேம்ஸ்ராஜ், மாவட்ட பொதுசெயலாளர் மோகன்தாஸ், குலசேகரம் நகர தலைவர் விமல் ஷெர்லின்சிங், மாவட்ட விவசாய காங்கிரஸ் தலைவர் குமார், வட்டார துணை தலைவர் ஹமாருதின், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தொகுதி தலைவர் மோகன்தாஸ், குமரி மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ஏசுராஜா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்தில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் பால்மணி தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. குழித்துறை நகர தலைவர் அருள்ராஜ், மாவட்ட பொருளாளர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திபாகர் மற்றும் நிர்வாகிகள் வக்கீல் ஷாலின், ஜோசப் தயாசிங், அனீஸ்ராஜன், எட்வர்ட் உள்பட பலர் கலந்து ெகாண்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காங்கிரசாருடன் வட்ட வழங்கல் அலுவலர் சுதா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அலுவலகத்தின் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு விட்டு கலைந்து சென்றனர்.

குமரி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமாரிடம் கேட்ட போது, ரேஷன்கடைகளில் 100 சதவிகிதம் கார்டுகளில் 80 சதவிகிதம் கார்டுதாரர்கள் மட்டுமே பொருட்கள் வாங்குகின்றனர். 20 சதவிகிதம் பேர் வாங்குவதில்லை. இதனை கணக்கில் கொண்டு 10 சதவிகிதம் பொருட்களை அரசு குறைத்துள்ளது. குமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 260 டன் அரிசி வாங்காமல் ஸ்டாக் இருந்தது. நவம்பர் மாதம் அதனை குறைத்துள்ளது. அரசியல் கட்சிகள் போராட்டம் குறித்து மேல்மட்டத்தில் தகவல் தெரிவித்துள்ளோம். இனி குறைகள் இருக்காது. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொருட்களை விநியோகம் செய்வதாக தெரிவித்துள்ளோம். அவர்கள் போன மாதம் வாங்காத அரிசியை கேட்கின்றனர். அதனை இனி வழங்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.