குமரி மாவட்டத்தில் இடைப்பருவத்தில் காபி மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன.மனிதனின் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியை தரும் பானங்களில் காபி முக்கிய இடத்தில் உள்ளது. தமிழகத்தில் காபி மரங்கள் திண்டுக்கல், நீலகிரி, சேலம், தேனீ மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காணப்படுகின்றன. இதில் குறிப்பாக மித வெப்பம் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தனியாக காபி தோட்டங்கள் காணப்பட்டன. அப்போது, கேரள வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து சென்றனர். அதன்பிறகு அதிக வருவாய் தரும் ரப்பர் மரங்கள் வந்துவிட்டதால் காபி போன்ற பயிர்களின் சாகுபடி குறைந்து போனது.
தற்போது, குமரி மாவட்டத்தில் ஆறுகாணி, களியல், குலசேகரம், பேச்சிப்பாறை, சுருளகோடு, மாறாமலை, பாலமோர் உள்ளிட்ட இடங்களில் குறைந்த அளவில் காபி மரங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக மலையோர பகுதிகளில் வீட்டுத்தோட்டங்களில் காபி மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.குமரி மாவட்டத்தில் ரோபஸ்டா, அராபிகா என 2 ரக காபி மரங்கள் காணப்படுகின்றன. இதில் ரோபஸ்டா, பிப்ரவரி -மார்ச் மாதங்களில் பூக்கும். அராபிகா, மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூக்க தொடங்கும். அதன் பிறகு தண்டுகளில் காபி காய் கொத்தாக காய்க்க தொடங்கும். காபி பழங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும். பழங்களை அறுவடை செய்து வெயிலில் உலர வைத்தபின் மேல் தோலை அகற்றினால் காபி தளர் எனப்படும் காபி கொட்டைகள் கிடைக்கும். இதனை பொடியாக்கி காபி துகளாக பயன்படுத்தப்படுகிறது. காபி பானத்துக்காக மட்டுமின்றி பல்வேறு உணவு பதார்த்தங்களில் மணமூட்டும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக காபி மரங்கள் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் பூத்து குலுங்கும். கடந்த மாதங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் குமரி மாவட்டத்தில் இடைப்பருவமான டிசம்பர்-ஜனவரி மாதத்தில் காபி மரங்கள் பூத்து குலுங்குகின்றன.
வெண்நிறத்தில், தொடுத்து வைத்த பிச்சி சரம் போல் காபி மரக்கிளையில் பூத்து குலுங்கும் காபி மலர்கள் தனித்தன்மையான வாசனை கொண்டவை. சாலையில் அல்லது தோட்டங்களில் நடந்து செல்வோரை இந்த வாசனை திரும்பி பார்க்க வைப்பதுடன் மனதிற்கும் இதம் தருகிறது.
இதுகுறித்து குலசேகரம் அருகே உண்ணியூர்கோணம் பகுதியைச் சேர்ந்த காபி விவசாயி முருகேசன் கூறுகையில், தற்போது இடைப்பருவத்தில் காபி மரங்கள் பூத்து குலுங்குகின்றன. காபி கொட்டைகளுக்கு தற்போது அதிக விலை கிடைப்பது இல்லை. ஒரு கிலோ ரூ.130 என்ற அளவிலேயே விலை உள்ளது.காபி மரங்களை தென்னந்ேதாப்புகளில் ஊடு பயிராக நடவு செய்ய மலைத் தோட்டப்பயிர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு உற்பத்தியை பெருக்கினால் கேரள வியாபாரிகள் வருகையால் விலை உயரவும், காபி பூக்கள் பூக்கும் சீசனில் தேன் உற்பத்தியும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், காபி உற்பத்தியையும் அழியாமல் பாதுகாக்கவும் முடியும் என்றார்.