Home » தமிழகச் செய்திகள் » டெங்கு பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: டாக்டர் ராதாகிருஷ்ணன்
202110110607404062_Be-vigilant-to-protect-yourself-from-the-effects-of-dengue_SECVPF

டெங்கு பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: டாக்டர் ராதாகிருஷ்ணன்

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழகத்தில் 32 ஆயிரத்து 17 இடங்களில் இன்று (நேற்று) தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இதுவரை மொத்தமாக 5.03 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரசு மூலம் 4.78 கோடி டோஸ் தடுப்பூசியும், தனியார் மூலம் 25.70 லட்சம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.
இதில் 3.74 கோடி முதல் தவணை தடுப்பூசியும், 1.29 கோடி 2-வது தவனை தடுப்பூசியும் ஆகும். தமிழக சுகாதாரத்துறையிடம் 46.08 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
தமிழகத்தில் கோவிஷீல்டு 2-வது தவணை தடுப்பூசியை 20 லட்சம் பேரும், கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசியை 6.85 லட்சம் பேரும் செலுத்தாமல் இருக்கின்றனர். அவர்களுக்காக மெகா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் உயிரிழந்தவர்களில் 96 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்.
மேலும், மேற்கு மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. 18 மாவட்டங்களில் மாநில சராசரி எண்ணிக்கையான 1.1 என்ற விகிதத்தில் இருந்து குறைந்துள்ளது. தமிழகத்தில் 125 நாட்களாக டெங்கு நோய் உள்ளது. குறிப்பாக அடுத்த 3 மாதங்களில் டெங்கு பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்காமல் கண்காணிக்க வேண்டும்.
தற்போதுவரை 375 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மாவட்டந்தோறும் தினமும் டெங்கு உறுதி செய்யப்படுகிறது. இதனால், சேலம், திருச்சி, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற பகுதிகளில் பூச்சியியல் வல்லுனர்களால் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயார் செய்யப்படுகிறது. தமிழகத்தில் டெங்குவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குழந்தைகளைப் பாதிக்கும் அரிய வகை நோய் குறித்து ஆய்வு செய்ய எழும்பூர் குழந்தைகள்நல ஆஸ்பத்திரியில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள மாவட்டங்களில் அதை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.