Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » 60 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசும் தமிழக, கேரள கடல் பகுதியில் ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை
sea-Hurricane-in-kanyakumari-tami;lnadu

60 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசும் தமிழக, கேரள கடல் பகுதியில் ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை

நாகர்கோவில், மார்ச் 12: தமிழக, கேரள கடல் பகுதியில் அடுத்த 36 மணி நேரத்திற்கு ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், எனவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கைக்கும், தென் தமிழகத்திற்கும் இடையே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர தொடங்கும் என்று தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் கடந்த 11ம் தேதி மதியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொள்ளும் என நேற்று மதியம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தென் தமிழகம், தெற்கு கேரளா, அரபிகடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதாவது 13ம் தேதி வரையும் பலத்த காற்று வீசக்கூடும், மணிக்கு 60 கி.மீ வேகம் வரை சூறாவளி காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு பகுதியில் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை பலத்த காற்றுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தமிழக, கேரள கடல் பகுதியில் ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தென் தமிழக கடல் பகுதியில் 2.8 முதல் 3.3 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும். வரும் 13ம் தேதி நள்ளிரவு வரை இந்த நிலை நீடிக்கும். தமிழகத்தில் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான பகுதியில் இந்த கடல் சீற்றம் காணப்படும். இதனை போன்று வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 45 முதல் கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 55 கி.மீ வரையும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி, இந்திய பெருங்கடல் பகுதிகளிலும், வட தமிழகம், புதுச்சேரி பகுதிகளிலும் அடுத்த 36 மணி நேரத்திற்கு மீன்
பிடிக்க செல்ல வேண்டாம்.

மேலும் கேரளாவில் விழிஞ்ஞம் முதல் கோழிக்கோடு வரையிலான கடல் பகுதியில் வரும் 13ம் தேதி வரை கடலில் 3.2 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகளுக்கு வாய்ப்புள்ளது. திருவனந்தபுரம் உள்ளடக்கிய தென் கேரள கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆழ்கடலுக்கு சென்றிருந்த விசைப்படகுகள், கரை திரும்ப தொடங்கியிருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் வானிலை மைய தகவல்கள் மீன்துறை வாயிலாக சம்பந்தப்பட்ட மீனவ கிராமங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.