குளச்சலில் கடைகளுக்கு குட்கா சப்ளை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் காரும், ரூ.44 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் சனல்குமார் மற்றும் போலீசார் குளச்சல் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது பாக்கியபுரம் பகுதியில் உள்ள ஜெகநாதன் (வயது65) என்பவரது கடையில் சோதனை செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டு பிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், ஜெகநாதனையும் கைது செய்தனர். அவருக்கு குட்கா சப்ளை செய்தது யார்? என்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது குட்காவை கூத்தாவிளையை சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர் சப்ளை செய்தது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்த போது குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த அந்தோணி ஜெய ஹேன்சன் (50), லட்சுமிபுரத்தை சேர்ந்த சுந்தர் ராஜ் (54), குலசேகரத்தை சேர்ந்த கபீர் (46) ஆகியோர் சப்ளை செய்தது தெரிய வந்தது.அதைத்தொடர்ந்து ஜான் கிறிஸ்டோபர், அந்தோணி ஜெய ஹேன்சன், சுந்தர்ராஜ், கபீர் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன் குட்கா கொண்டு செல்ல பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் ரொக்கப்பணம் ரூ. 44 ஆயிரம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.