Home » உலகச்செய்திகள் » 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
19

4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 6 மாதத்துக்கு ஒரு முறை என்கிற வகையில் சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படுகிறார்கள்.

விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்புவதற்காக அமெரிக்காவின் அரசு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் க்ரூ டிராகன் விண்கலத்துடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்த ராக்கெட் கடந்த ஜூன் மாதம் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா மற்றும் ஜப்பானை சேர்ந்த விண்வெளி வீரர்கள் 4 பேர் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் நேற்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, இந்திய நேரப்படி அதிகாலை 5.57 மணிக்கு, பால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

27 மணி நேர பயணத்துக்கு பிறகு க்ரூ டிராகன் விண்கலம், இன்று சர்வதேச விண்வெளி இந்த ஆய்வு மையத்தை சென்றடையும். இந்த விண்கலத்தில் சென்றுள்ள நாசாவின் மைக்கேல் ஹாப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷன்னான் வாக்கர் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த சோய்சி நொகுச்சி ஆகிய 4 விண்வெளி வீரர்களும் அடுத்த 6 மாதத்துக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.