நாட்டிலுள்ள 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில், புதுடெல்லி மற்றும் சஞ்சய் ஏரி பகுதிகளில் முறையே காகங்களும், வாத்துகளும் இறந்து கிடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி மாவட்டத்தில் கோழிகளிடையேயும் மற்றும் மும்பை, தானே, தபோலி மற்றும் பீட் ஆகிய பகுதிகளில் காகங்களிடையேயும் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
ஹரியாணாவில் நோயின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பாதிக்கப்பட்ட பறவைகளை அழிக்கும் பணி நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணிக்கவும், நோய் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் இமாச்சலப் பிரதேசத்தை பார்வையிட்ட மத்திய குழு, 2020 ஜனவரி 11 அன்று பஞ்ச்குலாவை வந்தடையும்.
தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
நீர் நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகள், பறவை சந்தைகள், உயிரியல் பூங்காக்கள், கோழி பண்ணைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்தவும், இறந்த பறவைகளை முறையாக அப்புறப்படுத்தவும், கோழி பண்ணைகளின் உயிரி-பாதுகாப்பை பலப்படுத்தவும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பறவைகளை அழிக்கும் பணிக்குத் தேவையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கருவிகளை போதுமான அளவில் இருப்பு வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோய் நிலவரத்தை நெருங்கிக் கண்காணிப்பதற்காகவும், மனிதர்களிடையே நோய் பரவும் வாய்ப்புகளைத் தடுப்பதற்காகவும் சுகாதார அதிகாரிகளோடு சிறப்பான முறையில் தகவல் தொடர்பையும், ஒருங்கிணைப்பையும் உறுதி செய்யுமாறு மாநில கால்நடை பராமரிப்புத் துறைகளை மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.