Home » உலகச்செய்திகள் » ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை, கொரோனாவை கொல்லுமா?
image 20

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை, கொரோனாவை கொல்லுமா?

உலகமெங்கும் ஏறத்தாழ 200 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று 50 லட்சத்துக்கும் அதிகமானோே-ரை தாக்கி இருக்கிறது. 3¼ லட்சத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்திருக்கிறது.

ஆனாலும் கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்கிருமியை கொல்வதற்கு, வேரடி மண்ணோடு வீழ்த்துவதற்கு ஒரு மருந்து கண்டுபிடித்து சந்தைக்கு வரவில்லை. இதையொட்டி உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ந்த நாடுகளில் மட்டுமின்றி, இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் ஆராய்ச்சிகள்தான் நீண்டு கொண்டிருக்கின்றன.

என்னதான் மாய்ந்து மாய்ந்து ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்தாலும், எப்போது இந்த கொரோனா வைரசுக்கு ஒரு முடிவு கட்டப்போகிறோம் என்பதுதான் உலகமெங்கும் உள்ள மக்களின் ஏகோபித்த கேள்வியாக நிற்கிறது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கொல்வதற்கு இந்தியாவில் மலேரியா காய்ச்சலை குணப்படுத்துவதற்கு தருகிற ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் வேலை செய்கின்றன என்று தகவல்கள் வெளிவரத்தொடங்கின. கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு இந்த மாத்திரைகளை கொடுக்கிறபோது, வைரஸ் அளவு குறைந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் தன் பங்குக்கு கூறியது.

இந்த மாத்திரை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பையும் கவர்ந்தது வியப்புக்குரியதுதான். இந்த மாத்திரைக்கு ஆதரவாக அவர் இன்னும் குரல் கொடுத்து வருகிறார். பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு தருவதற்காக கோடிக்கணக்கான மாத்திரைகளை அனுப்ப வைத்தார்.

அதுமட்டுமல்ல, வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சில அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவிய நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக டிரம்ப் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை 10 நாட்களுக்கு மேலாக எடுத்து வருவதாக வெளிப்படையாக கூறினார்.

அதே நேரத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள், கொரோனா வைரசுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் வேலை செய்யும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற போதிலும், இந்த மாத்திரைகளை கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு கொடுத்து ஆராய்ச்சி நடத்துகிறார்கள்.

இந்தநிலையில் கொரோனா வைரசை ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் கொல்லுமா என்ற கேள்வியை உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால பிரிவின் செயல் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரேயானிடம் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது:-

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளோ அல்லது குளோரோகுயின் மாத்திரைகளோ (இரு மாத்திரைகளும் மலேரியாவுக்கு நிவாரணமாக வழங்கப்படுகின்றன) பல நோய்களுக்கு மருந்துகளாக தரலாம் என்று உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலன் அளிக்கும் என்பதை இனிதான் கண்டறிய வேண்டும்.

உண்மையில் இதற்கு நேர்மாறாக இந்த மாத்திரைகளினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் குறித்து அதிகாரிகள் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல நாடுகள் இந்த மாத்திரைகளின் மருத்துவ பரிசோதனைகளை மருத்துவர்களின் மேற்பார்வையில் நடத்தி வருகின்றன.

ஒவ்வொரு நாட்டின் தேசியத்தலைமையும், இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதற்கு ஆதரவான அல்லது எதிரான ஆதாரங்களை மீண்டும் மதிப்பிட்டு எடை போட்டு மதிப்பிடுவது அவசியமான ஒன்று.

– இப்படி டாக்டர் மைக்கேல் ரேயான் சொல்கிறார்.

இதற்கு மத்தியில் உலக சுகாதர நிறுவனத்தின் சுகாதார நெருக்கடி கால திட்ட தொழில் நுட்ப தலைவர் டாக்டர் மரியா வான்கெர்கோவ், இன்றைய நிலவரப்படி 17 நாடுகளில் 320 ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரசுக்கு இந்த மாத்திரைகள் வேலை செய்வது பற்றி சோதனைகள் நடத்தி வருவதாக சொல்கிறார்.

இந்த தருணத்தில் கொரோனா வைரஸ் தடுப்புக்காக தான் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் எடுத்து கொள்வதை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் நேற்றுமுன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்கள் மத்தியில் பேசுகையில், “இன்னும் ஒன்றல்லது இருநாட்களில் நான் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை முடித்துக் கொள்வேன்” என குறிப்பிட்டார்.

ஆக, கொரோனா வைரசை கொல்லும் வலிமை ஹைடராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளுக்கு உண்டா என்பதை தெரிந்து கொள்ள தற்போது உலக அளவில் நடந்து வருகிற ஆய்வுகளின் முடிவுகள் வரும் வரையில் காத்திருந்துதான் ஆக வேண்டும்!