Home » கன்னியாகுமரி செய்திகள் » வெள்ளிச்சந்தையில்கலெக்டர் அரவிந்த் தலைமையில் கிராமசபை கூட்டம்

வெள்ளிச்சந்தையில்கலெக்டர் அரவிந்த் தலைமையில் கிராமசபை கூட்டம்

குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம், வெள்ளிச்சந்தை ஊராட்சிக்கு உட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு கிராமசபைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், தனிநபர் சுகாதாரம் மற்றும் சுற்றுபுறத்தை மையப்படுத்தி “எழில்மிகு கிராமம்” என்ற சிறப்பு பிரசாரம் குறித்தும், குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரித்தல், அனைத்து பொது இடங்களையும் சுத்தமாக பேணுதல், திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளை ஏற்படுத்துவது குறித்தும், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகளை பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடை செய்தல் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – 2 குறித்தும், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், சிறுபான்மையினர் விவகாரத்துறையின் மூலம் கல்வி உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்தல், வறுமை குறைப்பு திட்டம் குறித்தும், குழந்தைகள் அவசர உதவி எண் மற்றும் முதியோர் உதவி எண்களை பொதுமக்கள் பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் தனபதி, பத்மநாபபுரம் சப் – கலெக்டர் அலர்மேல் மங்கை, கலெக்டரின் நேர் முக உதவியாளர் ஸ்டீபன், கல்குளம் தாசில்தார் வினோத், சமூக நலத்துறை சிறப்பு தாசில்தார் ரமேஷ், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மைக்கேல், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விசாலி, வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார், குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்து பாண்டி, வெள்ளிச்சந்தை கிராம நிர்வாக அலுவலர் பீனா, குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகுமார், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா, வட்டார மருத்துவ அலுவலர் பிரதீப்குமார், வெள்ளிச்சந்தை மின் வாரிய இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய தலைவர் அனுஷா தேவி மற்றும் ஒன்றிய, ஊராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.