Home » தமிழகச் செய்திகள் » வீட்டு வசதி வாரியம் மூலம் ரூ.26 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்கள் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்

வீட்டு வசதி வாரியம் மூலம் ரூ.26 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்கள் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வாயிலாக 26 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கோட்ட அலுவலக கட்டிடம், வீட்டு வசதி பிரிவு அலுவலக வளாகம், துணைக்கோள் நகரக் கோட்ட அலுவலக கட்டிடம் மற்றும் விருந்தினர் மாளிகை ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அந்த வகையில், வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி திட்டப்பகுதி 1-ல் 7 கோடியே 37 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கோட்ட அலுவலக கட்டிடம், திருச்சி கிழக்கு வட்டம், சாத்தனூர் கிராமம், கே.கே நகரில், 1.39 ஏக்கர் பரப்பளவில் 11 கோடியே 55 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருச்சி வீட்டு வசதி பிரிவு அலுவலக வளாகம்.

மதுரை, தோப்பூர் கிராமத்தில் தோப்பூர் தன்னிறைவு திட்டப்பகுதியில் 4 கோடியே 50 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகரக் கோட்ட அலுவலக கட்டிடம், மதுரை மாஉச்சப்பட்டி கிராமத்தில் உச்சப்பட்டி பகுதி-7 திட்டப்பகுதியில், 2 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகை என திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹிதேஸ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உள் (போக்குவரத்து) துறை சார்பில் செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டிடம் மற்றும் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 3 கோடியே 72 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஓட்டுனர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலக கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, போக்குவரத்து ஆணையர் இல.நிர்மல்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.