Templates by BIGtheme NET
He-belongs-to-the-family-of-the-family-Lord-Shiva-is-the

விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்: அரசு பள்ளியில் படித்து ‘இஸ்ரோ’ தலைவராக உயர்ந்த சிவன்

நாகர்கோவில்,

விண்வெளியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும் வல்லமை பெற்ற நாடாக இந்தியா விளங்கிக் கொண்டிருக்கிறது. நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் செயற்கைகோள்களை வெற்றிகரமாக அனுப்பி உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ).

மிகச்சிறந்த விஞ்ஞானிகளை உருவாக்கி வரும் இஸ்ரோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்து சாதிக்க வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரது கனவாகும். அப்படிப்பட்ட இஸ்ரோ நிறுவனத்துக்கு தலைவராக மிகப்பெரிய பொறுப்புக்கு வந்து, தமிழகத்தைச் சேர்ந்தவரும், அதுவும் தமிழகத்தின் தென்கோடி முனையில் உள்ள குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான விஞ்ஞானி கே.சிவன் சாதனை படைத்து இருக்கிறார்.

‘இஸ்ரோ‘வின் தலைவராக பணியாற்றி வந்த ஏ.எஸ்.கிரண்குமார் இன்று (வெள்ளிக்கிழமை) பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்தநிலையில் அந்த பதவி விஞ்ஞானி கே.சிவனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவர் இதுவரை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோவின் புதிய தலைவராக பொறுப்பை ஏற்க உள்ள சிவனின் சொந்த ஊர், குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை கிராமம் ஆகும்.

பி.எஸ்.எல்.வி-சி 40 ராக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான ஆயத்த பணியில் மும்முரமாக சிவன் ஈடுபட்டிருந்த போதுதான், அவர் இஸ்ரோவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடின உழைப்பின் காரணமாக உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார் என்று அவரது சொந்த ஊரான சரக்கல்விளை கிராம மக்கள் கூறுகிறார்கள். தான் ஒரு பிரபல விஞ்ஞானி என்றாலும் ஊருக்கு வரும் போது, மிகவும் எளிமையாய் எல்லோரிடமும் பழகக்கூடியவர். குமரி மாவட்டத்தில் மாணவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றி இருக்கிறார். மேலும் விவசாயம் தொடர்புடைய பணிகளிலும் ஆர்வம் கொண்டவர். அவரைப்பற்றிய மேலும் சில சுவாரசியமான தகவல்களை இங்கு காணலாம்.

விஞ்ஞானி சிவனின் பெற்றோர் கைலாச வடிவு நாடார்-செல்லம் ஆவர். அவருக்கு ஒரு அண்ணன், 2 சகோதரிகள். அண்ணன் ராஜப்பா கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மறைந்தார். கைலாச வடிவு நாடார் ஒரு விவசாயி ஆவார்.

சிவன் தனது தொடக்க கல்வியை சரக்கல்விளையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியிலும், அதன்பிறகு வல்லன்குமாரன்விளையில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வரையும் பயின்றார். பின்னர் நாகர்கோவில் இந்துக்கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் படித்தார்.

படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக விளங்கினாலும், நேரம் கிடைக்கும் போது எல்லாம் தந்தைக்கு உதவியாக விவசாய வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார். 1980-ம் ஆண்டு மேற்படிப்புக்காக சென்னையில் உள்ள எம்.ஐ.டி. (மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) கல்வி நிறுவனத்தில் சேர்ந்து ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் பட்டம் பெற்றார். 1982-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையத்தில் விண்வெளி சம்பந்தமான ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படிப்பை முடித்து முதுகலை பட்டம் பெற்றார். பிற்காலத்தில் இதே பாடப்பிரிவில் மும்பை ஐ.ஐ.டி. மூலம் பி.எச்டி. பட்டம் பெற்றார்.

1982-ம் ஆண்டில் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்த அவர், கடின உழைப்பின் மூலம் பல்வேறு பதவிகளை பெற்று உயர்ந்தவர்.

விஞ்ஞானி சிவனின் மனைவி மாலதி. இவர்களுக்கு சித்தார்த், சுசாந்த் என்ற 2 மகன்கள் உள்ளனர். அவர் குடும்பத்தோடு திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். அடிக்கடி ஊருக்கு வருவார். அவர்களது பூர்வீக வீட்டில் அவருடைய அண்ணன் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

விஞ்ஞானி சிவன், பத்திரகாளி அம்மனின் பக்தர் ஆவார். ஊருக்கு வரும்போது எல்லாம் வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று தரிசனம் செய்வார். இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு ராக்கெட்டுகள் ஏவப்படும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தாலும், அந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட வேண்டும் என்று வேண்டி, அதற்கு சில நாட்களுக்கு முன்பாக வந்து பத்திரகாளி அம்மனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இன்று, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பி.எஸ்.எல்.வி.-சி 40 ராக்கெட் ஏவப்பட இருப்பதையொட்டி கடந்த 5-ந் தேதி நாகர்கோவில் சரக்கல்விளைக்கு வந்து அம்மனை வேண்டி, சிறப்பு பூஜை நடத்திச் சென்றுள்ளார்.

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த விஞ்ஞானி சிவன், அரசு பள்ளிகளில் படித்து இஸ்ரோவின் தலைமைப் பதவிக்கு வந்திருப்பதை சரக்கல்விளை கிராம மக்களும், மாணவ-மாணவிகளும் நேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். அவர் படித்த அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.