Home » கன்னியாகுமரி செய்திகள் » வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்ப்பு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்ப்பு

அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக்கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் தொடர்பான அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டும், அதில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்தவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம்பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இம்மாதம் 1-ந் தேதி (நேற்று முன்தினம்) முதல் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in இணையதளத்திலும் அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் (வி.எச்.ஏ.) என்ற செயலி மூலமாகவும் ஆதார் எண்ணைஇணைக்கலாம். அப்படி இல்லாவிட்டால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6B அல்லது கருடா மொபைல் ஆப்-ல் பூர்த்தி செய்து கொடுத்தும், வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ – சேவை மையத்தினை அணுகியும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம். படிவம் 6B அல்லது கருடா மொபைல் ஆப்-ல் வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், சட்டமன்ற தொகுதி, ஆதார் அட்டை எண், செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். ஆதார் அட்டை இல்லையெனில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட அடையாள அட்டை, வங்கி மற்றும் தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம், தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டின் ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாளச் சான்று, பாஸ்போர்ட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணிக்கான அடையாள அட்டை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேல்சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அலுவலக அடையாள அட்டை, இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள அட்டை (போன்ற ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.

1-1-2023 -ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெறும் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு பணிகள் நாளை (வியாழக்கிழமை) முதல் நடைபெறவுள்ளது. எனவே தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஏதேனும் மறுசீரமைப்பு பணிகள் இருப்பின் அது குறித்த விவரத்தினை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (உதவி கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார்) தெரிவிக்க வேண்டும். படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றில் சிறிய அளவிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை, கலெக்டரின்நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க. சார்பில் கலந்து கொண்ட வக்கீல் ஆனந்த் கூறும்போது, ‘ஆதார் எண் என்பது ஒருவரின் தனிநபர் ரகசியம் அடங்கியதாகும். எனவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது தனிநபர் ரகசியம் பாதுகாக்கப்படாத நிலை ஏற்படும்’ என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கலந்து கொண்ட மனோகர் ஜஸ்டஸ் கூறும்போது, ‘வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடாது. ஏனென்றால் வாக்காளர் அடையாள அட்டையில் ஒரு முகவரியும், வாக்காளர் அடையாள அட்டையில் ஒரு முகவரியும் பலருக்கு இருக்கும். இதனால் இரண்டிலும் ஒத்த முகவரி என்ற காரணத்தைக்கூறி சாதாரண வாக்காளர்களின் வாக்குரிமையை அதிகாரிகள் பறிக்கும் அபாயம் இதில் உள்ளது. மேலும் ஆதார் முகவரி பிரச்சினைகளின் காரணமாக பல நலத்திட்ட உதவிகளை உண்மையான பயனாளிகள் அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோன்று வாக்காளர்களின் வாக்குகள் பறிபோகும் ஆபத்தும் இதில் உள்ளது. அதனால் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கக்கூடாது’ என்றார்.