Home » இந்தியா செய்திகள் » ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா ராஜினாமா: பதவிக்காலம் முடிய 6 மாதங்கள் இருக்கும்போது ‘திடீர்’ முடிவு
Reserve-Bank-vicegovernor-Acharya-resigns-Sudden

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா ராஜினாமா: பதவிக்காலம் முடிய 6 மாதங்கள் இருக்கும்போது ‘திடீர்’ முடிவு

புதுடெல்லி,

ரிசர்வ் வங்கி துணை கவர்னர்களில் ஒருவராக கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 23-ந்தேதி விரால் ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். இது, 3 ஆண்டுகால பதவி ஆகும்.

அவரது பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜனவரி 23-ந்தேதி முடிவடைகிறது. இருப்பினும், அடுத்த மாதம் 23-ந்தேதியுடன் பதவி விலகப்போவதாக அவர் கூறியுள்ளார். ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே அவர் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.

ரிசர்வ் வங்கிக்கு எழுதிய கடிதத்தில் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சார்யா, சில வாரங்களுக்கு முன்பு, ரிசர்வ் வங்கிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், தவிர்க்க இயலாத தனிப்பட்ட காரணங்களுக்காக ஜூலை 23-ந்தேதிக்கு பிறகு துணை கவர்னர் பொறுப்பில் தொடர முடியாத நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து உரிய அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரால் ஆச்சார்யாவின் நியமனம், பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்கள் தொடர்பான மத்திய மந்திரிசபை குழுவின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்டது. அவரது ராஜினாமாவை அந்த குழு ஏற்றுக்கொள்ளும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பில் இருந்து உர்ஜித் பட்டேல் விலகினார். எனவே, கடந்த 7 மாதங்களில் ரிசர்வ் வங்கியின் உயர் பதவிகளில் நடக்கும் 2-வது ராஜினாமா இதுவாகும்.

இதைத்தொடர்ந்து, ரிசர்வ் வங்கியில், என்.எஸ்.விஸ்வநாதன், பி.பி.கனுங்கோ, எம்.கே.ஜெயின் ஆகிய 3 துணை கவர்னர்கள் மட்டும் தற்போது உள்ளனர்.

பதவி விலகிய விரால் ஆச்சார்யா, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றியவர். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், உர்ஜித் பட்டேல் ரிசர்வ் வங்கி கவர்னராக பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து, அவர் துணை கவர்னராக நியமிக்கப்பட்டார்.

அப்போது, பணமதிப்பு நீக்கம் காரணமாக, வங்கிகளில் பணம் எடுப்பதற்கும், போடுவதற்கும் அடிக்கடி புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்து வந்தது. அதனால், ரிசர்வ் வங்கி விமர்சனங்களை சந்தித்து வந்த நேரத்தில், விரால் ஆச்சார்யா, துணை கவர்னராக நியமிக்கப்பட்டார்.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை துறையின் பொறுப்பாளராக அவர் செயல்பட்டார். ‘ஏழைகளின் ரகுராம் ராஜன்’ என்று ஒருதடவை அவர் தன்னைத்தானே வர்ணித்துக் கொண்டார்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்டு மாதம் அவர் பொருளாதார பேராசிரியர் பணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.