Templates by BIGtheme NET
Rajinikanths-policy-and-plans-for-the-party-are-ready

ரஜினிகாந்த் கட்சிக்கு கொள்கை, திட்டங்கள் தயாராகின்றன நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம்

சென்னை,

ரஜினிகாந்த் கட்சிக்கு சிறப்பு நிபுணர் குழுவை வைத்து கொள்கை, திட்டங்கள் தயாரிக்கும் பணி நடக்கிறது. நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அரசியலுக்கு வந்துள்ள ரஜினிகாந்த், உறுப்பினர் சேர்ப்பு பணிகளை முடித்து விட்டு கட்சி பெயரை அறிவிக்கிறார். இதற்காக ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கி அதற்கு உறுப்பினர் சேர்க்கும் வேலைகள் நடக்கின்றன. இணையதளத்தில் பதிவு செய்தும், முகாம்கள் நடத்தியும் உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 முதல் 10 லட்சம் பேர்வரை இலக்கு நிர்ணயித்து 2 கோடி பேரை உறுப்பினராக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக உறுப்பினர் படிவ விண்ணப்பங்கள் அச்சிட்டு வினியோகிக்கப்பட்டு உள்ளன. ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. அதன் பிறகு கட்சி பெயரை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கட்சி பெயர், கொடி, சின்னங்களை தேர்வு செய்தல், கொள்கை திட்டங்களை உருவாக்குதல், புதிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதற்காக நம்பகத்தன்மை உள்ள அறிவார்ந்த குழுக்களை ரஜினிகாந்த் அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதில் உயர் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற சமூக அக்கறை உள்ள அதிகாரிகளும் இருப்பதாக தெரிகிறது.

ஆன்மிக அரசியல் என்பது ரஜினிகாந்த் கொள்கையாக இருப்பதால் கொடியில் பாபா முத்திரையை சின்னமாக பயன்படுத்த திட்டமிட்டு உள்ளார். கட்சிக்கு கொள்கை திட்டங்கள் உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. இதில் தமிழக நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் நதிகளை இணைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ஏற்கனவே குரல் கொடுத்து இருந்தார். இதற்காக ரூ.1 கோடி தருவதாகவும் அறிவித்தார்.

தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாய பயிர்கள் கருகுவதும் காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பக்கத்து மாநிலங்களோடு மோதல் ஏற்படுவதும் அடிக்கடி நடக்கிறது. அதே நேரம் தமிழக குளங்களும், ஏரிகளும் தூர்வாராமல் கிடப்பதாகவும் இதனால் மழை நீர் கடலில் வீணாவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆந்திராவில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நதிகளை இணைப்பதில் முனைப்பு காட்டி வருகிறார். தமிழகத்தில் தென்மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி, கருமேளி ஆறு, நம்பி ஆறு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டு இன்னும் முடியாமல் இருக்கிறது என்றும் பச்சையாறு, போரையாறு, எலுமிச்சை ஆறு உள்ளிட்ட 6 நதிகள் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

நல்லாறு, பாம்பாறு இணைப்பு திட்டம், பாழையாறு-புன்னம்பிழா திட்டம், அத்திக்கடவு-அவினாசி, காவிரி, குண்டலாறு திட்டம், அக்கினி, தென் வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு உள்ளிட்ட நதிகளை இணைக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதாவும் சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நதிகள் அனைத்தையும் இணைக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது, தண்ணீர் பற்றாக்குறையை போக்கி வறுமையை ஒழிப்பது, ரஜினிகாந்த் கட்சியின் முக்கிய கொள்கையாக இருக்கும் என்றும் கட்சி பெயருடன் தமிழக நதிநீர் இணைப்பு கொள்கையை அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

விவசாயிகள், தொழிலாளர்கள் நலன், வேலையில்லா திண்டாட்டம் ஒழிப்பு, தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்றவைகளும் கொள்கை திட்ட அறிக்கையில் இடம்பெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.