சற்று முன்
Home » சினிமா செய்திகள் » மூளை கட்டியை அகற்ற நடிகை சரண்யா சசிக்கு மீண்டும் ஆபரேஷன் : நடிகர்-நடிகைகள் உதவி செய்ய வேண்டுகோள்
Actress-Saranya-Sasi-has-been-reoperated-to-remove-the

மூளை கட்டியை அகற்ற நடிகை சரண்யா சசிக்கு மீண்டும் ஆபரேஷன் : நடிகர்-நடிகைகள் உதவி செய்ய வேண்டுகோள்

தமிழில், ‘பச்சை என்கிற காத்து’ படத்தில் தேவதை என்ற பெயரில் நடித்தார். மலையாளத்திலும், தமிழிலும் ஏராளமான டி.வி. தொடர்களில் நடித்துள்ள சரண்யா சசி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக அவதிப்பட்டார். இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

அதன்பிறகு அவர் பினு சேவியர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து அவர் படங்கள் மற்றும் டி.வி. தொடர்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு மூளையில் மீண்டும் கட்டி ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள். இதனால் அவர் உடல்நிலை மோசமாகி இருக்கிறது.

மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு அதிகம் செலவு ஆகும் என்பதால் அவருக்கு நடிகர், நடிகைகள் உதவி செய்ய வேண்டும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுபற்றி கேரள சமூக சேவகர் சூரஜ் பாலகரன், நடிகை சீமா, ஜி நாயர் ஆகியோர் இணைந்து முகநூலில் (பேஸ்புக்) வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில் சரண்யா சசியின் மருத்துவ செலவுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்து இருக்கின்றனர். ஏற்கனவே சரண்யா சசி 6 முறை அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார் என்றும், 7-வது முறையாக தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும், அவர்கள் அந்த வீடியோவில், சரண்யா மோசமான நிலையில் இருக்கிறார். இது, அவருக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை. இதற்கு உதவி செய்வதற்காக நடிகை சரண்யா சசி அம்மாவின் வங்கி கணக்கையும் பதிவிட்டுள்ளனர்.