Home » குமரி செய்திகள் » மூன்றே வாரத்தில் முழிக்கும் தார் ரோடு கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?
02

மூன்றே வாரத்தில் முழிக்கும் தார் ரோடு கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?

புதிதாக செப்பனிட்டு மூன்று வாரங்கள் கூட நிறைவடையாத மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் திடீர் பள்ளம் தோன்றியிருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் இருந்து கருங்கல் செல்லும் மார்க்கெட் ரோடு பழுதடைந்து கிடந்ததால் தார் ரோட்டை அப்புறப்படுத்தி விட்டு காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. ஆனால், ஒரு வருடம் நிறைவடைவதற்குள் இந்த காங்கிரீட் தளம் போடப்பட்ட ரோடும் பழுதடைந்து ஆங்காங்கே குண்டும், குழிகளுமாக மாறியது. இந்நிலையில், கடந்த மாதம் மார்க்கெட் ரோட்டில் சுமார் ஒரு கி.மீ தூரத்திற்கு காங்கிரீட் ரோட்டை அப்புறபடுத்தி விட்டு தார் ரோடு போடும் பணி தொடங்கியது. ஏற்கெனவே அப்பகுதியில் ரோடுகள் எளிதில் சேதம் அடைவதால் தரமானதாகவும், அதிகாரிகளின் முழு மேற்பார்வையில் ரோடு பணி மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், அப்பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தார் போடும் பணி நிறைவடைந்தது. காந்தி மைதானத்திற்கும், மார்த்தாண்டம் மார்க்கெட்டின் முதல் கேட்டின் இடைப்பட்ட பகுதியில் நடுரோட்டில் திடீரென பள்ளம் தோன்றி உள்ளது. தார் போட்டு செப்பனிட்ட மூன்று வாரத்திற்குள் ரோடு சேதம் அடைந்து திடீர் பள்ளம் தோன்றியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரோடு பணி தரமானதாகவும், அதிகாரிகளின் மேற்பார்வையிலும் நடந்ததா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். எனவே, உடனடியாக உயர்அதிகாரிகள் செப்பனிடப்பட்ட ரோட்டை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.