Home » இந்தியா செய்திகள் » முழு பெரும்பான்மையுடன் மீண்டும் பா.ஜனதா ஆட்சிகடைசி கட்ட பிரசாரத்தில் மோடி பரபரப்பு பேச்சு
Modi-Furore-speech-in-last-campaign

முழு பெரும்பான்மையுடன் மீண்டும் பா.ஜனதா ஆட்சிகடைசி கட்ட பிரசாரத்தில் மோடி பரபரப்பு பேச்சு

போபால்,

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல், நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது.

மோடி பிரசாரம்

பிரதமர் நரேந்திர மோடி தனது கடைசி தேர்தல் பிரசாரத்தை மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் நகரில் மேற்கொண்டார்.

அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

மீண்டும் மோடி அரசுதான் வரும் என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் காம்ருப் வரை, ஒட்டுமொத்த நாடும் சொல்கிறது.

இந்த தேர்தலில், 300 தொகுதிகளுக்கு மேல் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். என்னை மீண்டும் பிரதமர் ஆக்க முடிவு எடுத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய சரித்திரம்

130 கோடி மக்களின் விருப்பத் தேர்வு, பா.ஜனதா கூட்டணிதான். இந்த ஞாயிற்றுக் கிழமை நீங்கள் ஓட்டு போட போகும்போது, புதிய சரித்திரம் எழுதப்போகிறீர்கள். கடந்த சில பத்தாண்டுகளுக்கு பிறகு, தொடர்ச்சியாக 2-வது தடவையாக பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். முழு பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும்.

முந்தைய தேர்தல்களில் இருந்து இந்த தேர்தல் வேறுபட்டது. முன்பெல்லாம் இந்திய மக்கள் ஏதேனும் ஒரு கட்சிக்காக வாக்களிப்பார்கள். இந்த தேர்தலில் நாட்டுக்காக ஓட்டளிக்கிறார்கள். புதிய இந்தியாவை உருவாக்க ஓட்டுப்போடுகிறார்கள்.

காங்கிரசை மன்னிக்காதீர்

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாதவர்கள்தான் ராணுவத்தில் சேர்கிறார்கள் என்று கூறினார். ஆனால், அவரை காங்கிரஸ் கட்சி கண்டிக்கவில்லை. தனது கூட்டணி கட்சியை கண்டிக்காத காங்கிரசை மக்கள் மன்னிக்கக்கூடாது.

பெண்களுக்கு தண்ணீரும், கழிவறையும்தான் முக்கிய பிரச்சினை. 50 ஆண்டுகளுக்கு முன்பு, சோஷலிஸ்ட் தலைவர் ராம்மனோகர் லோகியா இதை அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் அடிக்கடி எழுப்பி வந்தார். ஆனால், நேரு கண்டுகொள்ளவில்லை. கழிப்பறைகளை கட்டிக்கொடுத்து, பெண்களுக்கு கண்ணியம் அளித்ததன் மூலம் ராம்மனோகர் லோகியாவின் விருப்பத்தை நான் நிறைவேற்றி உள்ளேன்.

அடுத்த 5 ஆண்டுகள், சுத்தமான குடிநீர் அளிப்பதில் எனது கவனத்தை செலுத்துவேன். பெரும்பாலான பகுதிகளில் இதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது.

சுதந்திர போராட்டம்

எனது முதல் பிரசார கூட்டத்துக்கும், கடைசி பிரசார கூட்டத்துக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. முதல் பிரசாரத்தை உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தொடங்கினேன்.

கடைசி பிரசாரத்தை கார்கோன் நகரில் நடத்தி உள்ளேன். இரண்டு நகரங்களும், 1857-ம் ஆண்டின் முதலாவது சுதந்திர போருடன் தொடர்புடையவை. மீரட் நகரில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக, இந்திய சிப்பாய்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இங்கு சுதந்திர போராட்ட வீரர் பீமா நாயக், பழங்குடியின மக்கள் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மோடி-அமித் ஷா பேட்டி

டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமையகத்தில் நேற்று மாலை பா.ஜனதா தலைவர் அமித் ஷா பேட்டி அளிக்க ஏற்பாடு ஆகி இருந்தது. அதில், யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளில் அவர் பங்கேற்ற முதலாவது பத்திரிகையாளர் சந்திப்பு இதுவே ஆகும்.

ஆனால், “அமித் ஷா நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு என்பதால், கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டேன்” என்று மோடி கூறிவிட்டார். அவர் கூறியதாவது:-

நமது நாடு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதை உலகுக்கு சொல்ல வேண்டியது அரசியல் கட்சியின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொருவரின் கடமை ஆகும். மக்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி சொல்லவே நான் வந்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு செயலுக்கும் மக்கள் எனக்கு துணை நின்றனர்.

நன்றி அறிவிப்பு கூட்டம்

நான் பதவி ஏற்பதற்கு முன்பே, கடந்த 2014-ம் ஆண்டு மே 17-ந் தேதியே நேர்மையும், ஒழுக்கமும் தொடங்கிவிட்டது. சூதாட்ட தரகர்களும், பந்தய சந்தைகளும் கடும் நஷ்டத்தை சந்தித்தன. கடைநிலை மக்களுக்கும் அரசின் திட்டங்களை கொண்டு போய் சேர்ப்பதே எங்கள் அரசு கொண்டு வந்த புதிய ஆட்சிமுறை கலாசாரம் ஆகும். தேர்தல் அறிக்கையில் எவ்வளவோ சொல்லி இருக்கிறோம். அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றுவோம்.

மாரத்தான் போன்று தொடர்ச்சியாக பிரசாரத்தில் பங்கேற்றேன். அவற்றில் நானும், அமித் ஷாவும் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் நன்றி அறிவிப்பு கூட்டங்கள் போலவே பேசினோம்.

தனி பெரும்பான்மை

இந்த தேர்தலில் பா.ஜனதா தனி பெரும்பான்மை பெறும். தொடர்ந்து 2-வது தடவையாக ஆட்சி அமைக்கப்போகிறோம். நீண்ட காலத்துக்கு பிறகு இந்த சரித்திரம் நடக்கப்போகிறது. நாட்டு மக்கள் முன்எப்போதையும் விட என்னை ஆசீர்வதிக்கிறார்கள்.

இவ்வாறு மோடி கூறினார்.

அமித் ஷா கூறுகையில், “இந்த தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி 142 பொதுக்கூட்டங்களிலும், 4 ரோடு ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். ஒன்றரை கோடி மக்களை தொடர்பு கொண்டுள்ளார். சில நாட்களில் ஒரே நாளில் 5 கூட்டங்களில் பேசியுள்ளார். மோடி மீண்டும் வருவதை மக்கள் விரும்புகின்றனர்” என்றார்.