Templates by BIGtheme NET
MK-Stalin-Says-Chief-Minister-and-Ministers-have-to-resign

முதல்வர்- அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை:

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது தொடர்பாக சட்டசபையில் கேள்வி எழுப்பினோம்.

இது பற்றி முதல்-அமைச்சரிடம் நேற்று நிருபர்கள் கேட்டதற்கு தனக்கு இதுபற்றி தகவல் வரவில்லை. இது பற்றி தெரியாது என்று கூறி இருந்தார். ஆனால் இன்று அது தொடர்பாக பெருநகர் குற்றவியல் நடுவரிடம் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு புலன் விசாரணையில் உள்ளது என்று இன்றைக்கு கூறுகிறார்.

தலைமை செயலாளருக்கு ஏற்கனவே அறிக்கை வந்துள்ள நிலையில் முதல்-அமைச்சர் தனக்கு தெரியாது என்று சொல்வது ஏற்புடையது அல்ல. இது ஒரு செயலற்ற அரசு என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய 34 பக்க அறிக்கை கொண்ட ஆவணங்கள் தலைமை செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் இது தொடர்பாக விரிவாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. என்ன வழக்கு? யார் மீது வழக்கு? எப்போது அறிக்கை வந்தது? எப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது? என்பது பற்றி முதல்-அமைச்சர் விளக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் வசம் காவல்துறை இலாகா உள்ளது. முறையான விசாரணை நடைபெற வேண்டும் என்றால் முதல்- அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து வழக்கை சந்திக்க வேண்டும். மற்ற அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்த சம்பவத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கும் கூட்டு உள்ளது. எத்தனையோ பிரச்சனைகளுக்கு பேட்டி கொடுக்கும் அவர் மத்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து வந்த மிக முக்கியமான உத்தரவு குறித்து இதுவரை தகவல் சொல்லாமல் மூடி மறைத்து வந்துள்ளார்.

எனவே இதில் அவருக்கும் கூட்டு உள்ளதோ என்று சந்தேகிக்கப்பட வேண்டி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*