Home » தமிழகச் செய்திகள் » முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்பதே என் ஆசை முதல்-அமைச்சர் பேச்சு

முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்பதே என் ஆசை முதல்-அமைச்சர் பேச்சு

தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பங்கள் சந்திப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி தொழில் காப்பகங்கள், தொழில் காப்பகங்களின் ஆதரவு பெற்ற புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த அரங்குகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும் அரங்குகளில் இடம்பெற்றிருந்த பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்தும், அதனுடைய பயன்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து, புத்தொழில் முனைவை ஊக்குவிக்கும் வகையில் மதுரை, நெல்லை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வட்டார புத்தொழில் மையங்களை காணொலிக்காட்சி மூலமாக மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் 3-வது பதிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 31 புத்தொழில் நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.55 கோடிக்கான காசோலைகளை மானியமாக வழங்கினார். தமிழகம் முழுவதும் 100 புத்தொழில் குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன. அதன் அடையாளமாக, 8 குழுக்களை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதேபோல தொழில் காப்பகங்களின் திறன் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு மாநிலத்தில் இயங்கும் தொழில் காப்பக நிறுவனங்களுக்கான தரவரிசை வழிமுறை திட்ட வரைவினையும் அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அனைத்து துறைகளுமே முன்னோக்கிய பாய்ச்சலில் இன்றைக்கு போய்க்கொண்டு இருக்கின்றன. அதில் சிறு, குறு, நடுத்தர தொழிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டு வருகிறது. தொழில் புரிய எளிதான மாநிலங்களின் பட்டியலில் 14-வது இடத்தில் இருந்து, இப்போது தமிழ்நாடு 3-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள் சார்ந்து இந்த நிதியாண்டின் இறுதியில் 2 மிகப்பெரிய மாநாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஒன்று தொழில்நுட்ப மாநாடாகவும், இன்னொன்று புத்தாக்க மாநாடாகவும் நடைபெறும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான தொழில் காப்பகங்கள் இயங்கி வருவதாக தரவுகள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து புத்தொழில் காப்பகங்களையும் உலக தரத்திற்கு உயர்த்துவதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். வளர்ந்துவரும் நவீன துறைகளை மையமாக கொண்டு இயங்கும் புத்தொழில் மற்றும் தொழில் முனைவு நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை நடைபெற்று கொண்டிருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘தமிழ்நாடு தொழில்நுட்ப புத்தாக்க மையம்’ சுமார் ரூ.54 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டு விட்டன. புத்தொழில் நிறுவனங்களை அறிமுகப்படுத்தும் ‘லான்ச் பேட்’ நிகழ்வுகளையும் நடத்த இருக்கிறோம். ஊரகப்பகுதிகளில் உள்ள பெண்கள், தொழில் முனைவில் ஈடுபட உதவும். அந்த வகையில் ‘தொழிலணங்கு’ என்ற பெயரில் நிகழ்ச்சியை ‘டான்சிம்’ நடத்துகிறது. உலகெங்கும் உள்ள தமிழ் முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்து ‘தமிழ் ஏஞ்சல்ஸ் நெட்வொர்க்’ தளம் விரைவில் அமைக்கப்படும். புத்தொழில் நிறுவனங்களையும், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் துறைசார் விற்பன்னர்களையும் இணைக்கும் வகையில் திறன்மிக்க ‘வழிகாட்டி மென்பொருள்’ ஒன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது.

சென்னை நந்தனத்தில் புத்தொழில் மையம் 3 மாதத்தில் செயல்பட தொடங்கும். புதிய புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை விரைவில் வெளியிடப்படும். 2030-ம் ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் கனவுடன் பயணிக்கும் நமக்கு, இவை அனைத்தும் உதவிகரமாக அமையப்போகின்றன.

தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, தொழில்துறை சார்பில் 6 முதலீட்டு மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். அந்த ஆறு முதலீட்டு மாநாடுகள் மூலமாக இதுவரை மொத்தம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருக்கிறது. தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய முழுமுதல் ஆசை. புத்தாக்க மற்றும் புத்தொழில் சார்ந்த முன்னெடுப்புகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டும் என்ற குறிக்கோள் காலத்தின் கட்டாயம்.

நல்ல பல முன்னெடுப்புகளை நான் பார்க்கிறேன். இவை அனைத்தையும், அனைத்து அமைச்சர்களும், அனைத்து துறை அதிகாரிகளும் வாரம்தோறும் கண்காணிக்க வேண்டும். கண்காணித்தால் மட்டும்தான் அந்த திட்டம் உருவாக்கியதற்கான பயன் நிச்சயம் கிடைக்கும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டும். படித்த அனைவருக்கும் படிப்புக்கு ஏற்ற வேலைகள், நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற பணியாளர்கள் என்ற சூழலை தமிழகத்தில் உருவாக்குவோம். புத்தொழில் மாநிலமாகவும், புத்தொளி மாநிலமாகவும் தமிழ்நாட்டை உருவாக்குவோம், உயர்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண்ராய், தொழில் கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன், ஐ.எஸ்.பி.ஏ. அமைப்பின் தலைவர் கே.சுரேஷ்குமார், ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ தலைவர் அஸ்தா குரோவர், காணொலிக்காட்சி வாயிலாக சபாநாயகர் மு.அப்பாவு, அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள், நெல்லை, ஈரோடு மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.