Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » முட்டம் கடற்கரையில் வாலிபர் பிணம் எப்படி இறந்தார்? போலீஸ் விசாரணை
How-did-the-dead-body-die-Police-investigation

முட்டம் கடற்கரையில் வாலிபர் பிணம் எப்படி இறந்தார்? போலீஸ் விசாரணை

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டம் முட்டத்தில் தனியாருக்கு சொந்தமான மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். நேற்று காலையில் முட்டம் துறைமுக கடற்கரையில் ஒரு வாலிபரின் பிணம் கிடந்தது.

இதுகுறித்து அந்த பகுதி மீனவர்கள், குளச்சல் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிணமாக கிடந்தவர் தூத்துக்குடி மாவட்டம் சவேரியார்புரத்தை சேர்ந்த ஆன்டனி மகன் சேவியர் சுதன் (வயது27) என்பது தெரிய வந்தது. மீனவரான இவர் கடந்த 6–ந் தேதி வேலை தேடி குமரி மாவட்டம் முட்டத்துக்கு வந்துள்ளார். இங்கு அவரது நண்பர் மூலம் ஒரு விசைப்படகில் வேலை கேட்டார்.

அப்போது, விசைப்படகு உரிமையாளர் படகு பழுதாகியுள்ளதால் தற்போது வேலை இல்லை என கூறியதாக தெரிகிறது. ஆனால், சேவியர் சுதன், வறுமையில் வாடுவதாகவும், உணவு வாங்கி சாப்பிட பணம் இல்லாமல் தவிப்பதாகவும் கூறினார். அவர் மீது பரிதாபம் பட்ட விசைப்படகு உரிமையாளர் ரூ. 500 கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மறுநாள் சேவியர் சுதனை காணவில்லை. அவர் வேறு ஏதாவது விசைப்படகில் வேலைக்கு சென்றிருக்கலாம் என கருதினார்.

இந்தநிலையில் நேற்று காலையில் முட்டம் துறைமுக கடற்கரையில் சேவியர் சுதன் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.

இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், தூத்துக்குடியில் உள்ள சேவியர் சுதனின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலோர காவல்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.