Home » சினிமா செய்திகள் » மீண்டும் நடிக்கிறார் பாவனா
Again-Acting-Bhavana

மீண்டும் நடிக்கிறார் பாவனா

தமிழில் சித்திரம் பேசுதடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பாவனா, தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ராமேஸ்வரம், ஆர்யா, வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

பாவனாவுக்கும் கன்னடத்தில் அவர் நடித்த முதல் படத்தை தயாரித்த நவீன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்தனர். திருச்சூரில் உள்ள பாவனா வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது.

கடந்த ஜனவரி மாதம் பாவனாவுக்கும், நவீனுக்கும் திடீர் திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து எளிமையாக திருமணத்தை நடத்தினார்கள். அதன்பிறகு பாவனா சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தமிழில் விஜய் சேதுபதி-திரிஷா நடித்து வெற்றி பெற்ற 96 படத்தின் கன்னட ரீமேக்கில் திரிஷா வேடத்தில் அவர் நடிக்கிறார். இதில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் கணேஷ் நடிக்கிறார். பிரீத்தம் குப்பி இயக்குகிறார். மீண்டும் நடிப்பது பற்றி பாவனா கூறும்போது, ‘‘பொதுவாக ரீமேக் படங்களில் நடிக்க எனக்கு பிடிக்காது. ஆனால் தமிழில் வந்த 96 படம் அனைத்து மொழிகளுக்குமான கதை. அதனால் நடிக்க சம்மதித்தேன். 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளேன். ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது’’ என்றார்.