Home » குமரி செய்திகள் » மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி
02

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி

பள்ளியாடியில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலியானார் இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : கிள்ளியூர், வெள்ளையம்பலம் காட்டுவிளையை சேர்ந்தவர் பொன்னுமணி. மனைவி காசி அம்மாள். இவர்களுக்கு நான்கு பெண்கள் 2 ஆண்கள் உட்பட ஆறு பிள்ளைகள் உண்டு. இதில் ஒரு மகன் முருகதாஸ் 35. கூலி தொழிலாளி. இவர் ஊரில் உள்ள ஒரு ரேடியோ செட் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். திருமணமாகவில்லை. சம்பவத்தன்று முருகதாஸ் பள்ளியாடியிலுள்ள ஒரு திருமண வீட்டில் ரேடியோ செட் அமைத்திருந்தார்.

இரவு 8 மணி அளவில் திருமண விழா முடிந்த உடனே முருகதாஸ் ரேடியோ செட் மற்றும் மின்விளக்கு அலங்காரத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இவர் மின் ஒயரை கழற்றும் போது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. மின்சாரம் உடல் முழுவதும் பாய்ந்ததால் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே மணப்பந்தல் அருகிலிருந்தவர்கள் மின் இணைப்பை தடை செய்து முருகதாசை தூக்கி சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் முருகதாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து மணி என்பவர் தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் விசாரணை நடத்தி உடலை உடல்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். எஸ்எஸ்ஐ பிரப குமார் வழக்கு பதிவு செய்தார்.