டாடா, ரிலையன்ஸ், அதானி குழுமங்களைப் போல் ரீடைல் துறைக்குள் நுழையாவிட்டாலும் மஹிந்திரா குழமம் தான் செய்து வரும் வர்த்தகத்திற்குத் தொடர்புடைய வர்த்தகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இந்நிலையில் இந்த விரிவாக்க பணிகளை வேகப்படுத்தும் விதமாக மிகப்பெரிய தொகையை முதலீடாகப் பெற காத்திருக்கிறது.
கனடாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதிகளில் ஒன்றான OTPP, மஹிந்திரா சஸ்டென் (Susten) நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளுக்காக 2,300 கோடி ரூபாயை செலுத்த வாய்ப்புள்ளது. மஹிந்திரா சஸ்டென் (Susten) நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 4,600 கோடி ரூபாயாக உள்ளது.
இந்த முதலீட்டுக்காக OTPP மற்றம் மஹிந்திரா சஸ்டென் நிறுவனம் ஆகிய இரு தரப்பும் ஒரு ஒப்பந்த பிரத்தியேக விதிகளின் கீழ் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மஹிந்திரா குழுமம் மஹிந்திரா சஸ்டன் நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்ய மூன்றாவது முயற்சி இதுவாகும். 2020 நிதியாண்டில் ரோத்ஸ்சைல்ட் உடன் ப்ரூக்ஃபீல்ட் இணைந்து மஹிந்திரா சஸ்டன் நிறுவனத்தின் 100% பங்குகளை விற்பனை செய்யும் முயற்சி தோல்வியடைந்தது. தற்போது முதலீட்டு வங்கியான அவெண்டஸ் கேபிடல் மஹிந்திரா சஸ்டனுக்கு ஆலோசனை வழங்குகிறது.
நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் சோலார் பார்க்-களைக் கட்டவே மஹிந்திரா சஸ்டென் உருவாக்கப்பட்டது. முதலில் இந்நிறுவனம் மஹிந்திரா குழுமத்தின் இன்குபேஷன் விங் பிரிவான மஹிந்திரா பார்ட்னஸ் கீழ் உருவாக்கப்பட்டது. இதன் பின்பு தனி நிறுவனமாகப் பிரிக்கப்பட்ட சோலார் எனர்ஜி தொடர்பாக EPC, டோட்டா மேனேஜ்மென்ட், சாப்ட்வேர் சர்வீசஸ் போன்ற சேவைகளை வழங்கி வருகிறது.
2020 ஆம் நிதியாண்டில் மஹிந்திரா சஸ்டென் 42 கோடி ரூபாய் லாபத்தைப் பதிவு செய்த நிலையில் 2021ஆம் நிதியாண்டில் வெறும் 6 கோடி ரூபாய் லாபமும், வருவாயில் 55 சதவீதம் சரிந்து 952 கோடி ரூபாயை பெற்றுள்ளது. மஹிந்திரா சஸ்டென் தொடர்ந்து இயங்கவும், இத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கக் கனடா நாட்டின் OTPP நிறுவனத்தின் முதலீடுகள் மிகவும் அவசியமானதாக உள்ளது.