மலேசியாவில் கரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்கு இரு வாரங்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மலேசியா பிரதமர் யாசின் கூறும்போது, “ நமது சுகாதார அமைச்சகம் தற்போது மிகுந்த களைப்பில் உள்ளது. மலேசியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 3,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 2 வாரங்களுக்கு ஊரடங்கு விதிக்கப்படுகிறது” என்றார்.
ஊரடங்கை அறிவிக்காவிட்டால் நிலைமை மோசமாகும் என்று மருத்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை மலேசிய அரசு அறிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, சவூதி ஆகிய நாடுகளும் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா பரவத் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 9 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.