Home » வர்த்தகம் செய்திகள் » மருந்துகளுக்கான தேசிய நிலைக்குழு வலியுறுத்தல் சில அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு செய்யக்கூடாது
medicine

மருந்துகளுக்கான தேசிய நிலைக்குழு வலியுறுத்தல் சில அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு செய்யக்கூடாது

புதுடெல்லி:

சில அத்தியாவசிய மருந்துகளை விலை கட்டுப்பாட்டு பட்டியலில் வைக்கக்கூடாது. அவற்றை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என, மருந்துகளுக்கான தேசிய நிலைக்குழு வலிறுத்தியுள்ளது. நீரிழிவு, புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கான உயிர்காக்கும் மருந்துகள், மக்கள் அதிகம் பயன்படுத்தும் மருந்து வகைகள் பல தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது இந்த பட்டியலில் சுமார் 376 மருந்துகள் உள்ளன. இவற்றுக்கான விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் (என்பிபிஏ) நிர்ணயிக்கிறது. மருந்து விலை நிர்ணய கொள்கையின் அடிப்படையில், அதிக லாபத்தை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த விலை நிர்ணய நடைமுறையை செயல்படுத்தி வருகிறது. அதேநேரத்தில், அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள சில மருந்துகள், கடைகளில் கிடைப்பது அரிதாகி விட்டது. சில மருந்துகள் வேறு மருந்துகளுடன் சேர்க்கப்பட்டு புதிய பெயரில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

இந்த சூழ்நிலையில், அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இருந்து சில மருந்துகளை நீக்க வேண்டும். அவற்றுக்கு விலை கட்டுப்பாடு கூடாது என மருந்துகளுக்கான தேசிய நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:
தற்போது அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் 376 மருந்துகள் இருக்கின்றன. இவற்றின் விலையை என்பிபிஏ கட்டுப்படுத்துகிறது. ஆனால் சில மருந்துகளின் விலை நிறுவனங்களுக்கு கட்டுபடியாகவில்லை. இதனால் அவற்றின் சப்ளை குறைந்து விட்டது. அதேநேரத்தில், சில மருந்துகள் அத்தியாவசிய மருந்து வகையாக இருந்து, அவற்றின் விலையை கட்டுப்படுத்தாவிட்டால், மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அவற்றை சாமானிய மக்களால் வாங்க முடிவதில்லை. எனவே, தற்போது இந்த பட்டியலில் உள்ள மருந்துகளை மறு பரிசீலனை செய்து சில மருந்துகளை நீக்கி மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.