Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » மனதிருந்தால் மார்க்கமுண்டு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும்: பாகிஸ்தான், இலங்கையில் என்ன விலை தெரியுமா?
petrol

மனதிருந்தால் மார்க்கமுண்டு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும்: பாகிஸ்தான், இலங்கையில் என்ன விலை தெரியுமா?

நாட்டில் பெட்ரோல் டீசல் விலைகள் முன் மாதிரியில்லாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனையடுத்து மக்களிடையே அதிருப்தியும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளதோடு அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்து வருகிறது.

ஹோட்டல்கள் உள்ளிட்ட அன்றாடம் மக்கள் புழங்கும் இடங்களிலும் உணவுகள் விலையேற்றம் கண்டுள்ளன.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் அரசில் உள்ளவர்கள் ஒன்றும் செய்ய முடியாது, என்று கையை விரித்துள்ளனர். அதாவது உலக கச்சா விலை அதிகரிப்பையும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்புக் குறைந்து வருவதையும் காரணமாகக் காட்டி வருகின்றனர்.

இது சால்ஜாப்பு சொல்வதாகவே உள்ளது. அண்டை நாடுகளில் இந்தியாவைக் காட்டிலும் பெட்ரோல், டீசல் விலைகள் குறைவு.

பெட்ரோலியம் திட்டம் மற்றும் ஆய்வு பிரிவு (PPAC), பெட்ரோலியம் மற்றும் இயற்கைஎரிவாயு அமைச்சக ஆதாரததைக் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளிவந்துள்ள அண்டை நாட்டு பெட்ரோல் டீசல் விலைகள் வருமாறு:

இந்தியா:

பெட்ரோல் லிட்டருக்கு (டெல்லி): ரூ.78.68, டீசல்: ரூ.70.42.

பாகிஸ்தான்:

பெட்ரோல் லிட்டர் ரூ. 53.55, டீசல் ரூ.61.47

பங்களாதேஷ்:

பெட்ரோல் ரூ.73.48, டீசல் ரூ.55.54.

இலங்கை:

பெட்ரோல் விலை ரூ.63.96 டீசல்- ரூ.52.05.

நேபாளம் (காத்மாண்டூ): பெட்ரோல் ரூ.69.94, டீசல் 59.86

இந்தியாவை விட அண்டைநாடுகளில் விலை குறைவாக உள்ளது.

இங்கு அதிகவிலைக்கு, பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் உற்பத்தி வரி, மாநிலங்கள் விதிக்கும் வாட் வரி ஆகியவையே காரணம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு ரூ.19.48 உற்பத்தி வரி வசூல் செய்கிறது. டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.15.33. இதைத்தவிர மாநில அரசுகள் வாட்வரியினை இதற்கும் மேலாக சுமத்துகின்றன. இதனையடுத்து மறைமுக வரி பெட்ரோல் மீது 100% கடந்து விட்டது, டீசல் மீது 70% கடந்து விட்டது.

வரிகள் இல்லாவிட்டால் இப்போதைய சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளை வைத்துப் பார்த்தால் கூட லிட்டர் ரூ.40தான் வரும்.

2009-10-ல் பெட்ரோலியப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி வருவாய் ரூ.64012 கோடி இது 2016-17-ல் ரூ.2,76,551 ஆக அதிகரித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் மொத்த வரிவருவாயில் கார்ப்பரேட் வரி வருவாய் 2009-10-ல் 39% ஆக இருந்தது 2017-18-ல் 29% ஆகக் குறைந்துள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.

கார்ப்பரேட்டுகள் மீது வரிச்சுமையைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலைகளைக் கட்டுப்படுத்தத் தவறி சாதாரண மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றும் கொள்கையினால் இந்தச் சுமையை மக்கள் சுமக்க வேண்டி வருகிறது.

கார்ப்பரேட்களின் வரிப்பகிர்மானம் குறைந்து சாதாரண எரிபொருள் நுகர்வோர் மற்றும் வருமானவரி செலுத்துவோர் பங்களிப்பு அதிகரித்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுமையில் கார்ப்பரேட் பயனடைந்து வருகிறது

சமையல் எரிவாயு, கெரசின் போல் பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டி வரி அமைப்புக்குள் கொண்டுவருவதுதான் விலை உயர்வுக்கான தீர்வாகும். ஜிஎஸ்டியின் உயந்தபட்ச 28% வரியை விதித்தால் கூட பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.60க்குள்தான் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர், இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றால் அதனை சலுகைகளை அனுபவித்து வரும் கார்ப்பரேட் வரிகள் மூலம் ஈடுகட்ட வேண்டும்.

2018-19 பட்ஜெட் வருவாய் தரவுகளின் படி கடந்த 2 நிதியாண்டுகளில் கார்ப்பரேட் வரிச்சலுகைகள் மூலம் வருவாய் இழப்பு ரூ.85,000 கோடி. ஆகவே மத்திய அரசின் ஒருதலைபட்சமான கார்ப்பரேட் ஆதரவு வருவாய் பெருக்கத் திட்டங்களினால்தான் இந்த விலை உயர்வு என்று நிபுணர்கள் பலர் கூறுகின்றனர். ஆகவே ஆள்பவர்களுக்கு மனமிருந்தால் நிச்சயம் மார்க்கமுண்டு என்று தெரிகிறது.