Templates by BIGtheme NET
Gunfire-in-Jharkhand-4-dead

மணல் அள்ளுவதில் தகராறு ஜார்கண்டில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் சாவு

கார்வா

ஜார்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் உள்ள பிப்ரி ஜத்புரா பாலு காட் என்ற இடத்தில் மணல் ஒப்பந்ததாரர் நானக் யாதவ் என்பவர் லாரிகள் மூலம் மணல் எடுத்துக் கொண்டிருந்தார். இதை அறிந்த கிராம மக்கள் அங்கு சென்று மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மணல் அள்ளும் ஊழியர்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ஊழியர்கள் பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில், உதய் யாதவ் (வயது 55) என்ற முதியவரும், அவரது 2 மகன்களும் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊழியர்களை தாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்த 15 லாரிகள், 3 மணல் அள்ளும் எந்திரங்கள் மற்றும் ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றுக்கு தீ வைத்தனர். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதனை தொடர்ந்து பொதுமக்கள் மணல் ஒப்பந்ததாரர் நானக் யாதவ் வீட்டிற்கு சென்று, வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடினர். பின்னர் அந்த வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்கு தங்கியிருந்த மணல் ஒப்பந்ததாரரின் ஊழியர் ஒருவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைந்துபோக செய்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*