Templates by BIGtheme NET
Home » சற்று முன் » மக்கள் ஓட்டு போட்டால் தமிழகத்தில் தாமரை மலரும் மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்
If-people-run-the-Lotus-blossom-in-Tamil-Nadu

மக்கள் ஓட்டு போட்டால் தமிழகத்தில் தாமரை மலரும் மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்

சென்னை

சுட்டு போட்டால் மலராது, மக்கள் ஓட்டு போட்டால் தமிழகத்தில் தாமரை மலரும் என மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்து உள்ளார்.

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

பொதுபிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை, நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் வாக்களித்து நிறைவேற்றி உள்ளனர். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இந்த 10 சதவீத இடஒதுக்கீடு எந்தவிதத்திலும் தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டை பாதிக்காது.

இந்த மசோதாவை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரித்து உள்ளன. உண்மையான சமூக நீதி காப்பாளர் மோடிதான். பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்ற குறையும் இதன் மூலம் தீர்க்கப்பட்டு உள்ளது. இந்த மசோதா சமூகநீதி பாதுகாப்பு ஆகும்.

53 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கையெழுத்து போட்டபோது தமிழகம் விரும்பவில்லை என்றால் அங்கு பணிகள் மேற்கொள்ளப்படாது என கூறப்பட்டது. தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவொரு பணியையும் பாரதீய ஜனதா கட்சி செய்யாது.

8–ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற தவறான தகவல் பரவியது. எந்தவொரு மொழியையும் கட்டாயப்படுத்தி படிக்க சொல்ல பாரதீய ஜனதா கட்சிக்கு விருப்பம் இல்லை.

நேர்மையான அரசியலை மக்களுக்கு எடுத்து செல்லுங்கள் என்று பிரதமர் சொல்லி உள்ளார். நாங்கள் ஆரோக்கியமான அரசியலை கொண்டு செல்ல விரும்புகிறோம். ஆனால் தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் கேள்விக்குறியாக உள்ளது.

தம்பிதுரையை ‘சிலிப்பர் செல்’ என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் ‘டாக்கர் செல்’லாக உள்ளார்.

தமிழகத்தில் சுட்டு போட்டாலும் தாமரை மலராது என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். சுட்டு போட்டால் மலராது. மக்கள் ஓட்டு போட்டால் தாமரை நன்றாக மலரும்.

இவ்வாறு அவர் கூறினார்.