Templates by BIGtheme NET
Home » சற்று முன் » போக்குவரத்து கழகம் லாபத்தில் இயங்க யோசனைகள்: முதல்-அமைச்சருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
MK-Stalins-meeting-with-the-Cheif-minister

போக்குவரத்து கழகம் லாபத்தில் இயங்க யோசனைகள்: முதல்-அமைச்சருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சுதர்சனம் ஆகியோர் வந்திருந்தனர். இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் நீடித்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை நஷ்டமின்றி செயல்படுத்தி, மக்களின் மீது சுமத்தப்படும் பஸ் கட்டண உயர்வு என்ற சுமையை அகற்றுவது குறித்து தி.மு.க.வின் ஆய்வுக்குழு தயாரித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் நிருபர்களுக்கு, மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை நஷ்டமில்லாமல் இயக்குவது பற்றி ஆய்வறிக்கை தயார் செய்வதற்காக தி.மு.க. சார்பில், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர். பாலு தலைமையில், எம்.எல். ஏ.க்கள் பொன்முடி, கே.என். நேரு, செங்குட்டுவன் மற்றும் தொழிற்சங்க பேரவையின் பொதுச்செயலாளர் சண்முகம், ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இரண்டு வாரம் ஆய்வு மேற்கொண்டு தயாரித்த ஆய்வறிக்கையை என்னிடம் அந்த குழு கொடுத்துள்ளது. அதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தோம். அதில் 27 பரிந்துரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி செயல்பட்டால் மக்கள் மீது பஸ் கட்டண உயர்வை சுமத்தும் அவசியம் ஏற்படாது. அந்த 27 பரிந்துரைகளை உடனே நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்த பரிந்துரைகளின் விவரம் வருமாறு:-

போக்குவரத்து கழகங்களின் அனைத்து நஷ்டத்தையும், முதலீடுகளையும் அரசே ஏற்கவேண்டும்.

கல்வி, மதிய உணவு, மின்துறை, பொதுவினியோகங் களை சேவைகளாகக் கருதி நிதி ஒதுக்கீடு செய்வது போல், போக்குவரத்துக்கழகத்துக்கும் மானியங்களை வெளிப்படையாக ஒதுக்கீடு செய்திடவேண்டும்.

மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் பயணச் சலுகை முழுமையாக மாதா மாதம் வழங்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் கொடுக்கப்படும் ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களின் செலவை அரசே ஏற்க வேண்டும்.

தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் ஓய்வு காலப் பலன்கள் மற்றும் இதர பிடித்தங்களுக்கான தொகைகளை மாதா மாதம் அந்த உரிய கணக்கில் செலுத்திட வேண்டும்.

எதிர்காலத்தில் டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்படும் கூடுதல் நிதி சுமையை அரசும் பொதுமக்களும் (சுமையின் பாரத்தை உணராத வண்ணம்) உரிய விகிதத்தில் ஏற்றிடவேண்டும். எனவே உடனடியாக கட்டண உயர்வு முழுமையாக திரும்பப் பெறவேண்டும்.

டீசல், பெட்ரோலுக்கு ஒரே சீரான 10 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்திட வேண்டும்.

அரசுப் பேருந்துகளின் சேவை நேரங்களை லாபம் ஈட்டும் வகையில் அமைக்க வேண்டும்.

6 ஆண்டுகள் அல்லது 6 லட்சம் கி.மீ. தூரம் இயக்கப்பட்ட பேருந்துகளை விடுத்து, புதிய பேருந்துகள் வாங்கிட அரசின் நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறையாமல் நிதி ஒதுக்கிட வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்து சேவைகளுக்கான ஒப்பந்தங்கள் இரு அரசுகளும் ஒப்புக்கொண்ட வழித்தடங்கள், இயக்கப்படும் பேருந்துகள் எண்ணிக்கை மற்றும் தூரத்தின் அடிப்படையில்தான் அமையவேண்டும்.

தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக கூடு கட்டவும், நீண்டதூர பயணத்துக்கு ஏற்றவாறு அதிசொகுசு பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்.

குறிப்பிட்டகால வரம்புக்கு உட்பட்டு எரிபொருள் தணிக்கை நடத்திட பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு கழகத்திலும் அமைக்கப்பட வேண்டும்.

சிறப்புப் பேருந்துகள், விழாக்கால பேருந்துகள் இயக்கத்தில் ஏற்படும் நட்டத்தை சரிசெய்ய திட்டமிடுவதுடன் இந்த இயக்கத்திற்கு உபரி பேருந்துகளை மட்டும் பயன்படுத்தியும், வழித்தடத்தில் இருக்கும் பேருந்துகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

நவீன பதாகை விளம்பரம், கூரியர் சேவை போன்ற வருவாயைப் பெருக்கும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

அரசு போக்குவரத்துக்கழகங்களுக்குச் சொந்தமான பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் காலி இடங் களைப் பயன்படுத்தி நவீன பேருந்து நிலையம் மற்றும் பயணியர் வசதிகளும் அமைப்பதோடு, அங்கு மேல் தளங்களில் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு ஏற்ப வசதிகளை ஏற்படுத்தி வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த முயற்சியில் முதற்கட்டமாக சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் இதற்கான செயல் திட்டம் உருவாக்கி அமல்படுத்தப்பட வேண்டும்.

ரெயில்வே துறையில் இருப்பதுபோல் ‘தட்கல்’ முறையில் பயண முன்பதிவும் கட்டணங்களும் வசூலித்து பேருந்துக்கழகங்களின் வருவாயை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பேருந்து கட்டணம் என்பது ரெயில்வே கட்டணத்தைவிட குறைவாக இருத்தல் வேண்டும்.

தமிழக அரசு பேருந்து சேவைகளைப் பொறுத்தவரையில் தற்பொழுது தமிழக மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிக திடீர் கட்டண உயர்வு போன்ற அதிர்ச்சிகளை தராத வகையில் அரசு பேருந்துகள் இயங்க வேண்டுமென்றால், மத்திய பெட்ரோலிய துறையில் முன்பு இருந்தது போல் தமிழக போக்குவரத்துத் துறையில் நிர்வகிக்கப்பட்ட விலை கட்டண முறை உருவாக்கப்பட்டு, அரசுப் பேருந்து நிறுவனங்களின் இயக்க செலவுகள் அனைத்தும் திரும்ப தரப்படுவதுடன், இவற்றுக்கு உரிய நிகர லாபம், வரிக்குப் பிறகு நிகர மதிப்பில் 12 சதவீதம் அளவுக்கு தரப்பட வேண்டும்.

இதற்காக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக மத்திய தொகுப்பு நிதியம் ஒன்றையும் இந்த நிதியத்தை செயல்படுத்தி இயக்குவதற்காக தமிழ்நாடு அரசுப் பேருந்து போக்குவரத்து ஒருங்கிணைப்பு ஆணையம் என்ற துறை ரீதியான நிர்வாக அமைப்பையும் தமிழக அரசு உடனே உருவாக்கிட வேண்டும்.

எனினும், போக்குவரத்துக் கழகங்கள் திறம்பட செயலாற்றி போதிய லாபம் ஈட்டினால்தான் 12 சதவீதம் அளவிலான லாபம் கழகங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியத்தின் உபரி தொகையிலிருந்து தரப்பட வேண்டும்.

மேற்கண்டவை உள்பட 27 பரிந்துரைகள் அதில் கூறப்பட்டுள்ளன.