Templates by BIGtheme NET
Home » சற்று முன் » பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்: போலீஸ் காவல் முடிந்து திருநாவுக்கரசு மீண்டும் சிறையில் அடைப்பு
Thirunavukarasu-again-imprisoned-in-jail

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்: போலீஸ் காவல் முடிந்து திருநாவுக்கரசு மீண்டும் சிறையில் அடைப்பு

கோவை,

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசின் போலீஸ் காவல் முடிந்து நேற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து திருநாவுக்கரசின் கூட்டாளிகள் 3 பேரை விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சியை அடுத்த சின்னப்பம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 27) மற்றும் அவரது கூட்டாளிகளான சபரிராஜன் (25), சதீஷ் (29), வசந்தகுமார் (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

போலீஸ் காவல் முடிந்து திருநாவுக்கரசை நேற்று காலை 8 மணியளவில் கோவை தலைமை குற்றவியல் நீதிபதி நாகராஜன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் திருநாவுக்கரசு கோவை சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரின் நீதிமன்ற காவல் இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. எனவே அவரை இன்று கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் சட்டம்-ஒழுங்கு நிலைமையை காரணம் காட்டி காணொளி காட்சி மூலம் திருநாவுக்கரசின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திருநாவுக்கரசு பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு எம்.பி.ஏ. படித்து முடித்தேன். வட்டித் தொழில் மூலம் எனக்கு அதிக வருமானம் கிடைத்ததால் கல்லூரியில் படிக்கும் போது அதிகம் செலவு செய்தேன். இதனால் பல மாணவிகளின் பழக்கம் கிடைத்தது. அப்போது மாணவிகளை எப்படி மயக்குவது என்பது எனக்கு தெரிந்தது. படிப்பை முடித்ததும் எனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கல்லூரி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி மயக்கினேன். எங்கள் வலையில் விழும் பெண்களை சுற்றுலா செல்லலாம் என்று கூறி காரில் அழைத்து சென்று சின்னப்பம்பாளையத்தில் உள்ள வீட்டில் ஆபாச படம் எடுப்போம். அதை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்தோம். சில பெண்களுடன் உல்லாசம் அனுபவித்தோம்.

இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் சில மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்தனர். ஆனால் பணம் கொடுத்து நாங்கள் அதில் இருந்து தப்பினோம். ஆனால் கடந்த மாதம் ஒரு கல்லூரி மாணவி அளித்த புகார் தான் எங்களை போலீசாரிடம் சிக்க வைத்து விட்டது.

இவ்வாறு வாக்குமூலத்தில் திருநாவுக்கரசு கூறியிருப்பதாக தெரிகிறது.

அடுத்ததாக சிறையிலிருக்கும் திருநாவுக்கரசின் கூட்டாளிகள் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தினால் தான் இந்த பாலியல் வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது? பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? என்பன போன்ற விவரங்கள் தெரியவரும்.