Home » சற்று முன் » பொள்ளாச்சி பாலியல் வன்முறை: திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை பெண்களை ஆபாச படம் எடுத்தது உறுதி செய்யப்பட்டது
Thirunavukarasu-house-CB-CID-Police-check-Make-sure-the

பொள்ளாச்சி பாலியல் வன்முறை: திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை பெண்களை ஆபாச படம் எடுத்தது உறுதி செய்யப்பட்டது

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக நடந்த பாலியல் வன்முறை குறித்து 19 வயது கல்லூரி மாணவி கொடுத்த புகார் தொடர்பாக திருநாவுக்கரசு (வயது 27), அவரது கூட்டாளிகள் சபரிராஜன் (25), சதீஷ் (29), வசந்தகுமார் (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

இதில் திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகிறார்கள். அவரிடம் நேற்று 3-வது நாளாக விசாரணை நடைபெற்றது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த திருநாவுக்கரசும், அவரது நண்பர்களும் தங்கள் வலையில் விழுந்த பெண்களை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது. அப்போது அரசியல் பிரமுகர்களின் உதவியால் போலீஸ் விசாரணை வளையத்துக்குள் சிக்காமல் இந்த கும்பல் தப்பியது. இதற்காக பல லட்சம் ரூபாய் போலீசாருக்கு கைமாறியதாகவும், அப்போதே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பிரச்சினை இந்த அளவிற்கு பூதாகரமாகி இருக்காது என்றும் புகார்கள் வந்துள்ளன.

இந்த பிரச்சினை வெளியானதும் திருநாவுக்கரசை வெளிமாநிலத்துக்கு தப்பிச் செல்லுமாறு போலீஸ் அதிகாரிகள் கூறியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி வெளிமாநிலம் சென்றவர், பிரச்சினை பரபரப்பானதும் ஊர் திரும்பியபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? திருநாவுக்கரசை வெளி மாநிலத்துக்கு தப்பிச்செல்லும்படி கூறிய போலீஸ் அதிகாரிகள் யார்? என்ற விவரங்கள் திருநாவுக்கரசிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதால் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கைதான 4 பேரின் தொடர்பில் இருந்த முகநூல் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர்.

திருநாவுக்கரசின் காலில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று வீக்கம் ஏற்பட்டது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். திருநாவுக்கரசின் போலீஸ் காவல் இன்று (திங்கட்கிழமை) முடிவடைவதால் போலீசார் இன்று மாலை அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

பொள்ளாச்சி அருகே உள்ள சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் நேற்று போலீசார் சோதனை நடத்தினார்கள். வீட்டின் வரைபடத்துடன் வீட்டில் உள்ள அறைகள், ஜன்னல்கள், கதவுகள், நுழைவுவாயில் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்து பதிவு செய்தனர். வீட்டில் வேறு எதுவும் தடயங்கள் இருக்கிறதா? என்றும் சோதனை செய்தனர்.

அங்கிருந்து பென்டிரைவ் உள்பட பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது. ஆபாச வீடியோவில் காணப்படும் வீடு இது தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். பின்னர் அந்த வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சோதனை நடந்தது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
திருநாவுக்கரசை வெளியில் அழைத்து வந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் இங்கு அவரை அழைத்துவரவில்லை. கோர்ட்டிலும் முன்கூட்டியே அதிக அளவில் கூட்டம் கூடியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தினோம். இந்த வீட்டுக்கு திருநாவுக்கரசும், அவரது நண்பர்களும் அடிக்கடி காரில் வந்துள்ளனர். ஆனால் காரில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாத அளவிற்கு கார் கண்ணாடிகள் கறுப்பு ஸ்டிக்கரால் ஒட்டப்பட்டு இருக்கும்.

சமூக வலைதளங்களில் பரவிவரும் 3 ஆபாச வீடியோக்களில் 2 வீடியோக்கள் இந்த வீட்டின் உள்பகுதியில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை சரிபார்ப்பதற்காக இங்கு வந்தோம். இது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆபாச வீடியோ எடுக்கும்போது பெண்களின் அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக அந்த வீட்டில் அதிக ஒலி எழுப்பும் ‘சவுண்ட் சிஸ்டம்’ வைத்திருந்ததையும் உறுதிப்படுத்தியுள்ளோம்.

திருநாவுக்கரசின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.