Home » கன்னியாகுமரி செய்திகள் » பொதுமக்களை தங்க வைக்க 50 தற்காலிக முகாம்கள் தயார்

பொதுமக்களை தங்க வைக்க 50 தற்காலிக முகாம்கள் தயார்

குமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை தங்க வைக்க 50 தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் அரவிந்த் கூறினார். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் கலெக்டர் அரவிந்த் கனமழை குறித்து நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் 16 மழைமானிகள் மூலம் மழையின் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை உள்ள நிலவரப்படி சராசரி மழைப்பொழிவு 49.23 மில்லி மீட்டர் ஆகும். மாவட்டத்தில் மிக தாழ்வான பகுதிகளாக அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 2 பகுதிகளும், தோவாளை தாலுகாவில் 4 பகுதிகளும் உள்பட 22 பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மழைவெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் உள்ள மக்களை தங்க வைப்பதற்காக அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் 12 தற்காலிக முகாம்களும், தோவாளை வட்டத்தில் 7, கல்குளம் வட்டத்தில் 4, விளவங்கோடு வட்டத்தில் 9, திருவட்டார் வட்டத்தில் 7, கிள்ளியூர் வட்டத்தில் 11 என மொத்தம் 50 தற்காலிக தங்கும் முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் 1077 மற்றும் 04652-231077 அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தோவாளை தாலுகாவில் ஒரு வீடும் மற்றும் விளவங்கோடு தாலுகாவில் ஒரு வீடும் சேதமடைந்துள்ளது. குளச்சலில் இருந்து படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இந்த நபர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. விரைவில் கரை திரும்புவதாக தெரிவித்தனர். 4-ந் தேதி (நாளை) வரை அதிக கனமழை பொழியுமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் 2 பேரிடர் மீட்பு குழுக்கள் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சென்று ஆறுகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.

பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் உள்பட துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். முன்னதாக குமரி மாவட்டத்துக்கு வருகை தந்துள்ள பேரிடர் மீட்புக்குழுவினர் கலெக்டர் அரவிந்தை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.