Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » பைப்லைன் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம் அனந்தன் குளம் படகுதுறைக்கு குடிநீர் கொண்டு செல்ல பொது மக்கள் எதிர்ப்பு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
water-pipeline

பைப்லைன் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம் அனந்தன் குளம் படகுதுறைக்கு குடிநீர் கொண்டு செல்ல பொது மக்கள் எதிர்ப்பு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

நாகர்கோவில், பிப்.12: ஆசாரிபள்ளம் அருகே அனந்தன் குளம் படகுதுறைக்கு குடிநீர் கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பைப் லைன் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு. ஆசாரிபள்ளம் அடுத்த அனந்தன் நகரில் அனந்தன் குளம் உள்ளது. இந்த குளத்தில் படகு சவாரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அனந்தன் குளம் பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்காக வடக்கு கோணம் பகுதியில் உள்ள போர்வெல்லில் இருந்து சுற்றுவட்டார பகுதிக்கு குடிநீர் எடுத்துசெல்லும் பைப்லைனில் இருந்து இணைப்பு பைப்லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் போர்வெல்லில் இருந்து குடிநீர் இணைப்புக்கான பைப் லைன் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்காக பணியாளர்கள் கொண்டு பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது. இந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அதைத் தொடர்ந்து பணிகளை உடனே நிறுத்த வேண்டும். குடிநீரை அனந்தன்குளம் படகு சவாரிக்காக கொண்டு செல்லக் கூடாது என்று பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்தனர். தொடர்ந்து இது குறித்து பொது மக்கள் நகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து பள்ளம் தோண்டும் பணியை பாதியில் நிறுத்தி விட்டு தொழிலாளர்கள் அங்கிருந்து சென்றனர். இது குறித்து ஊர் பொது மக்கள் கூறுகையில், “ போர்வெல்லில் இருந்து நாகர்கோவில் நகராட்சி 23வது வார்டு பகுதியை சேர்ந்த அனந்தன்நகர், ஆசாரிபள்ளம், பள்ளவிளை வரை உள்ள 25க்கும் மேற்பட்ட பகுதி உள்பட சுற்றுவட்டாரத்தில் உள்ள பல ஊர்களுக்கு ஏற்கனவே தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அனந்தன் குளம் தாழ்வான பகுதி, இந்த பகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்தால் மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாது. இதனால் பொது மக்கள் குடிநீருக்கு பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். நகராட்சி அதிகாரிகளும் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே இங்கிருந்து தண்ணீர் எடுத்து செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் “ என்றனர்.