Templates by BIGtheme NET
The-lady-officer-has-over-30-job-transfers-in-16-years

பெண் அதிகாரி ரூபா 16 ஆண்டுகளில் 30 பணி இடமாற்றத்தை சந்தித்தவர்

பெங்களூரு,

பெங்களூரு சிறை முறைகேடுகளை வெளியே கொண்டு வந்த பெண் அதிகாரி ரூபா பணியில் கண்டிப்புடன் இருந்ததால் 16 ஆண்டுகளில் 30 முறை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சசிகலாவுக்கு தனி சமையலறை மற்றும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து டி.ஜி.பி. சத்யநாராயணராவுக்கு கடிதம் எழுதினார்.
இதன் மூலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடக்கும் முறைகேடுகளை துணிச்சலாக செயல்பட்டு ரூபா அதை வெளி உலகுக்கு கொண்டு வந்துள்ளார். இவரை பற்றி கர்நாடகம் மட்டுமின்றி தமிழக மக்களும் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். சமூக வலைதளங்களில் இவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அவரை பற்றிய சுவாரசியமான தகவல்கள் வருமாறு:–

கர்நாடக சிறைத்துறையின் முதல் உயர் போலீஸ் பெண் அதிகாரியான ரூபா, தாவணகெரேயில் பிறந்தவர். அங்கு பள்ளி படிப்பை முடித்த அவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் டிகிரி மற்றும் எம்.எஸ்சி.(மனோதத்துவம்) படித்து முடித்தார். 2000–ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று கர்நாடக மாநில ஒதுக்கீட்டில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ஐ.ஏ.எஸ். தேர்வில் 43–வது இடத்திலும், பயிற்சி தேர்வில் 5–வது இடத்திலும் வெற்றி பெற்றார்.
இவர் பணியில் சேர்ந்து 16 ஆண்டுகள் ஆகிறது. பணியில் கண்டிப்புடன் இருப்பதால் இவர் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து உள்ளார். இந்த 16 ஆண்டுகளில் 30–க்கும் அதிமான முறை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதல் முறையாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள யாதகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார். இவர் தனது மொத்த அரசு பணி சேவையில் பெரும்பாலான பகுதியை வட கர்நாடகத்தில் பணியாற்றியுள்ளார். வட கர்நாடகம், அடிப்படை வசதிகள் குறைவான பகுதி ஆகும். இதனால் அது அரசு ஊழியர்களுக்கு தண்டனை பகுதியாகவே(பனிஸ்மென்ட் ஏரியா) கருதப்படுகிறது.

கடந்த 2004–ம் ஆண்டு அப்போதைய மத்திய பிரதேச முன்னாள் முதல்–மந்திரி, இப்போதைய மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி சர்ச்சைக்குரிய உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் கொடியை ஏற்ற முயற்சி செய்தார். பல அதிகாரிகள் தயங்கிய நிலையில், தார்வார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ரூபா துணிச்சலாக செயல்பட்டு உமாபாரதியை கைது செய்தார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
கதக் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ரூபா பணியாற்றியபோது, அங்கு ஒரு கலவரம் ஏற்பட்டது. அதில் தொடர்புடைய முன்னாள் எம்.எல்.ஏ. யாவகல் என்பவரை கைது செய்ய துணை போலீஸ் சூப்பிரண்டு தயங்கினார். இதையடுத்து அந்த துணை போலீஸ் சூப்பிரண்டை ரூபா பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை ரூபா கைது செய்து சிறையில் அடைத்தார். இவருடைய துணிச்சலான செயலை பார்த்து அந்த மாவட்ட மக்கள் பாராட்டினர்.

இவர் கர்நாடகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி முனித் மொட்ஜில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் கர்நாடகத்தில் பணியாற்றி வருகிறார். யாதகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ரூபா பணியாற்றியபோது, அந்த மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது.
அவருடைய பெண் குழந்தையை அரசு பள்ளியில் 3 ஆண்டுகள் படிக்க வைத்தார். தனது பெற்றோர் மாநில அரசின் உயர் அதிகாரிகளாக பணியாற்றியபோதும் வெறும் தரையில் அமர்ந்து அந்த குழந்தை கல்வி கற்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். ரூபாவின் கணவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களது திருமணம் காதல் திருமணம் கிடையாது. பெற்றோர் பார்த்து முடிவு செய்யப்பட்ட திருமணம் ஆகும். திருமணம் குறித்து முடிவு எடுத்தபோது, வருங்கால கணவரின் முகத்தை பார்க்காமலேயே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் ரூபா. தனக்கு கணவராக வருபவர் என்னை போல் நேர்மையான அதிகாரியாக இருந்தால் போதும் என்று மட்டும் அவர் கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*