Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » புயல் சின்னம் எதிரொலி: குமரியில் 40 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
40-thousand-fishermen-did-not-go-to-sea-in-kanyakumari

புயல் சின்னம் எதிரொலி: குமரியில் 40 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கன்னியாகுமரி:

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதனால் கடல் பகுதியில் மணிக்கு 55 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

இதனால் மீனவர்கள் 48 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு 36 மணிநேரமாக இந்த தடை நீடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் 48 மணிநேரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கடலோர கிராமங்கள் உள்ளன. கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், முட்டம் ஆகிய 4 மீன்பிடி துறைமுகங்களும் உள்ளன. இந்த துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு ஏராளமான விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.

இந்த மீனவர்கள் 15 நாட்களுக்கு மேல் கடலில் தங்கி இருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள். மேலும் வள்ளம், கட்டுமரங்கள் மூலமும் ஏராளமான மீனவர்கள் கரையோரங்களில் மீன் பிடித்து வருகிறார்கள்.

தற்போது குமரி கடல் பகுதியில் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் கடந்த 2 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப தொடங்கி உள்ளனர்.

ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களும் குமரி துறைமுகங்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். அனைத்து மீனவர்களும் கரை திரும்ப வயர்லஸ் மூலம் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

இன்றைய நிலவரப்படி குமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடிதுறை முகங்களில் விசைப்படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி உள்ளனர். வள்ளம், கட்டுமரம் போன்றவை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் ஏற்கனவே கடலுக்கு செல்லாமல் உள்ளனர். அவர்களது விசைப்படகுகள் சின்ன முட்டம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிற்கின்றன.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சென்ற 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்ப தொடங்கிவிட்டன. நேற்று இரவு கரை திரும்பிய இந்த விசைப்படகு மீனவர்களின் வலைகளில் அதிகளவு கேரை மீன்களே சிக்கி இருந்தன. இவை விலை குறைந்தவை என்பதால் மீனவர்கள் நஷ்டத்தையே சந்தித்துள்ளனர்.

மேலும் மீன்கள் வரத்து குறைந்ததால் மார்க்கெட்டுகளில் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது. விலை உயர்ந்த மீன்களுக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது. #tamilnews