Home » கன்னியாகுமரி செய்திகள் » புனேயில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

புனேயில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

புனேயில் இருந்து கேரளா வழியாக கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரணியல் அருகே வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் பாபு, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரைட் ஆகியோர் இரணியல் ரெயில் நிலையம் சென்று ரெயிலில் சோதனை நடத்தினர். அப்போது ரெயிலின் ஒரு பெட்டியில் 6 பொட்டலங்கள் அனாதையாக கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி பரிசோதனை செய்தபோது கஞ்சா இருந்தது தெரிய வந்தது. ஒவ்வொரு பொட்டலத்திலும் 2 கிலோ வீதம் மொத்தம் 12 கிலோ கஞ்சா இருந்தது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்து நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இந்த கஞ்சா பொட்டலங்களை கடத்தியது யார்? எங்கிருந்து கடத்தப்பட்டது? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.