Home » இந்தியா செய்திகள் » பிஹார் சட்டப்பேரவை தேர்தலின் நாயகன் லாலு

பிஹார் சட்டப்பேரவை தேர்தலின் நாயகன் லாலு

பிஹாரின் தலைநகரான பாட்னாவில், 1970-ம் ஆண்டு ஒரு முக்கிய அரசியல் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில், ராம் மனோகர் லோகியா, ஜார்ஜ் பெர்னாண்டஸ் உட்பட காங்கிரஸ் அரசுக்கு எதிரான பல தலைவர்கள் கூடியிருக்க, பிஹாரின் அப்போதைய முதல்வர் கற்பூரி தாக்கூரும் அங்கு இருந்தார்.

அப்போது அவர், ஒரு மூலையில் கைகட்டி நின்று கொண்டிருந்த இளைஞனை பார்த்து, “இவன் எதிர்காலத்தில் பெரிய தலைவனாக வருவான். அந்த அளவுக்கு அவனிடம் பேச்சுத் திறமை இருக்கிறது” என்று குறிப்பிட்டு அங்கிருந்தவர்களிடம் அறிமுகப்படுத்தினார். இவருடைய வாக்கு பலிக்கும்படி நடந்து கொண்டிருக்கும் அந்த இளைஞன் வேறு யாருமல்ல. இன்று பிஹார் சட்டப்பேரவை தேர்தலின் நாயகனாகி விட்ட லாலு பிரசாத் யாதவ் தான் அந்த இளைஞர்.

லாலுவின் பெயரை கேட்டாலேயே சிரிக்காமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அரசியலில் கோமாளியாக சித்தரிக்கப்பட்டவர் அவர். பிஹாரில் முன்னேற்றம் இல்லாமல் போனதற்கும் அவர் காரணமாக பேசப்பட்டார். பிஹாரில் முக்கிய அரசியல் எதிரியாக இருந்த நிதிஷ்குமாருடன் கைகோர்த்து லாலு தற்போது வெற்றி பெற்றுள்ளார். நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்தை விட அதிக தொகுதிகள் பெற்றுள்ளது லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம். இதனால் நடந்து முடிந்த பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் உண்மையான நாயகனாகக் கருதப்படுகிறார் லாலு.

பிஹாரின் கிராமம் ஒன்றில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் லாலு. பாட்னா பல்கலைக்கழகத்தில் பியூனாக இருந்த இவரது மாமா, லாலுவின் திறமையை கண்டு வியந்து, அவரை கல்வி பயில இதில் கொண்டு வந்து சேர்த்தார். இதன் மாணவர் பேரவையின் செயலாளராக 1974 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட லாலுவை கண்டு பலரும் வியந்தனர். காரணம், சமூக அந்தஸ்து, பணபலம் என எதுவும் இல்லாத ஒருவர் அதுவரை அந்தப் பதவிக்கு வந்தது இல்லை.

அந்தக் காலகட்டத்தில், குஜராத்தின் அகமதாபாத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண் 1966-ல் தொடங்கிவைத்த விலைவாசி உயர்வு போராட்டத்தை கையில் எடுத்தார் லாலு. இதில் முதல் முறையாக அவர் பிஹார் மாணவர்கள் மற்றும் பெண்களையும் இணைத்தார். அன்று முதல் சூடுபிடித்த லாலுவின் அரசியல் வாழ்வில் அவரது மனைவியாக ராப்ரிதேவி கரம் பிடித்தார்.

இதற்கிடையே இந்திரா காந்தி அவசரச்சட்டமாக ‘மிசா’ கொண்டுவந்தபோது கைதானார் லாலு. ஆனால் மனம் தளராத லாலு, சிறையில் இருந்தபோது தனக்கு பிறந்த முதல் பெண் குழந்தைக்கு ‘மிசா பாரதி’ என பெயரிட்டார்.

அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சப்ரா தொகுதியில் போட்டியிட்ட லாலு, எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இதே தொகுதியில் 1980-ல் அவருக்கு தோல்வி கிடைத்தது. இதற்குப் பின் பிஹாரின் மதேபுரா தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது அரசியல் வாழ்வில் ஏறுமுகம் தொடர்ந்தது.

பிஹார் சட்டசபையின் புயலாகக் கருதப்பட்ட லாலுவுக்கு இவரது குருவான கற்பூரிதாக்கூர் 1987-ல் இறந்த பிறகு அவர் வகித்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது. அன்று முதல் பிஹாரின் முதல்வர் பதவியை குறிவைத்து வலைவீசிய லாலுவுக்கு அடுத்த மூன்றாவது ஆண்டில் அப்பதவி கிடைத்தது. அப்போது லாலுவை விட மூத்த தலைவர்களும், அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்கால் ஆதரிக்கப்பட்டவர்களுமான ராம் சுந்தர்தாஸ், ரகுநாத் ஜா ஆகியோரும் பின்னுக்கு தள்ளப்பட்டனர்.

இந்த ஆட்சியை தக்க வைத்து கொள்ள லாலு செய்த சாணக்கியத்தனத்தால், ஒருமுறை பாரதிய ஜனதா உடைந்து ‘ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா’ உருவானது. இன்னொரு முறை பிஹார் மாநிலமே உடைந்து ஜார்க்கண்ட் என்ற புதிய மாநிலம் உருவானது.

இதுபோன்ற வேலைகளையே முதன்மையாக எடுத்துச்செய்த லாலு, 1997-ல் கால்நடைத் தீவன ஊழலில் சிக்கி சிறைக்குச் செல்ல நேரிட்டது. அப்போது கூட லாலு தனது அரசியல் மூளையை சரியாகப் பயன்படுத்தி, தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கி அரசின் ‘ரிமோட்டை’ தனது கையில் வைத்துக்கொண்டார். ஆனால் மாநிலத்தில் தொடர்ந்த அதிகமான கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

‘சமோசாவில் ஆலு (உருளைக்கிழங்கு) இருக்கும் வரை, பிஹாரில் இந்த லாலு இருப்பான்’ என்று அடிக்கடி வசனம் பேசிக் கொண்டிருந்த அவரை 2005-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பிஹார்வாசிகள் தூக்கி எறிந்து, நிதிஷ்குமாரை ஆட்சியில் அமர்த்தினர்.

இதனால், எம்.பி.யாக தனது அரசியல் ஜாகையை டெல்லிக்கு மாற்றிக்கொண்ட லாலு, மத்திய ரயில்வே அமைச்சராகி புதிய அவதாரம் எடுத்தார்.

அன்று முதல் இன்றுவரை, தேர்தலில் வெற்றிபெற பிற்படுத்தப்பட்ட ஜாதி அரசியல் செய்தாலே போதுமானது என்பது லாலுவின் கருத்தாக இருந்தது. பொது இடங்களில் மக்களோடு கலந்து ஒரு அரசியல்வாதியாக அல்லாமல் சாதாரணமாகவும், நகைச்சுவையாகவும் பேசுவது லாலுவை மண்ணின் மைந்தராக உணர வைத்தது. இந்தமுறை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் இருந்தபோதிலும் பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் லாலுவையே கடுமையாக விமர்சனம் செய்தார். இவற்றை மோடி மீதே திருப்பி விடும் வகையில் லாலு அளித்த பதில்கள் கடுமையாக இருந்தன. கடந்த செப்டம்பர் 27 முதல் நவம்பர் 3-ம் தேதி வரை லாலு, நிதிஷை விட அதிகமாக நாள்தோறும் 10 மேடைகள் ஏறி பிரச்சாரம் செய்தார்.

பிஹாரில் லாலு 15 ஆண்டுகள் நடத்தியதாக கூறப்படும் காட்டுத் தர்பார் ஆட்சி இத்தேர்தல் வெற்றியால் மறக்கப்பட்டு விட்டது.

லாலுவின் அரசியல் எதிர்காலத்துக்கு இத்தேர்தல் முடிவு ஒரு புத்துணர்வை அளித்துள்ளது. இத்துடன் தனது இரு ஆண் வாரிசுகளான தேஜ்பிரதாப், தேஜஸ்வீ பிரசாத் ஆகியோரை அரசியலில் நுழைக்கும் வாய்ப்பும் கிடைத்து விட்டது.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் 6 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டது, லாலுவுக்கு தேர்தலில் போட்டியிடத் தடையாக உள்ளது. எனினும் அத்தடையை ஒரு பொருட்டாகக் கருதாமல் லாலு செய்த உழைப்புக்கு கிடைத்த வெற்றி அவரை பிஹார் தேர்தலில் நாயகனாக்கி விட்டது!