Home » தமிழகச் செய்திகள் » பஸ் தினம் கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் இடைநீக்கம்
Celebrating-Bus-DayPachiayappa-college-students9

பஸ் தினம் கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் இடைநீக்கம்

சென்னை,

பஸ் தினம் கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

பஸ் தினம்

கோடை விடுமுறைக்கு பிறகு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 17-ந் தேதி திறக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் பஸ் தினம் கொண்டாடுவது வழக்கம். அதே சமயம் பஸ் தினம் கொண்டாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவையும் மீறி 17-ந் தேதி மாநகர பஸ்சில் ஏறி குத்தாட்டம் போட்டும், பஸ்சுக்கு முன்பாக ஊர்வலமாக வந்தும் கல்லூரி மாணவர்கள் பஸ் தினத்தை கொண்டாடினார்கள். சில இடங்களில் மேற்கூரையில் அமர்ந்தபடி மாணவர்கள் சென்றனர். பல்வேறு இடங்களில் பஸ் தினம் கொண்டாடியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இடைநீக்கம்

இந்நிலையில் சென்னை செனாய்நகர் புல்லா அவென்யூ அருகே பஸ் தினம் கொண்டாடிய 16 மாணவர்கள் மீது கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் 9 பேர் சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்தவர்கள். இதுதொடர்பாக பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்துக்கு கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது.அதன் அடிப்படையில் மதுரவாயலை சேர்ந்த டி.பிரகாஷ், எம்.மணிகண்டன், பி.மணிகண்டன், டி.விக்னேஷ், பூந்தமல்லியை சேர்ந்த வி.நரேந்திரன், எம்.ராகேஷ், எஸ்.சுந்தரேசன், சென்னிக்குப்பத்தை சேர்ந்த ஆர்.பரணிதரன், அரும்பாக்கத்தை சேர்ந்த கே.மகேஷ் ஆகிய 9 பேரையும் இடைநீக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல், கல்லூரி முதல்வரின் அனுமதி இல்லாமல் வளாகத்துக்குள் நுழையக்கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. 9 பேரும் பி.ஏ. 2-ம், 3-ம் ஆண்டு படித்து வருபவர்கள்.

இதேபோல், அமைந்தகரை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் பஸ் தினம் கொண்டாடியதாக மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த மாணவர்கள் பஸ் தினம் கொண்டாடிய வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இனிவரக்கூடிய நாட்களில் பஸ் தினம் கொண்டாடும் மாணவர்கள் மீது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் இடைநீக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றே தெரிகிறது.