Home » சற்று முன் » பரபரக்கும் தமிழக அரசியல் களம் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் போட்டியா? ஓரிரு நாளில் பட்டியல் வெளியாகிறது
Tamilisai-Soundararjan-To-contest-in-Thoothukudi

பரபரக்கும் தமிழக அரசியல் களம் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் போட்டியா? ஓரிரு நாளில் பட்டியல் வெளியாகிறது

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க., தி.மு.க. அணிகள் முழுவீச்சில் தயாராகி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க. இடம்பெற்றுள்ளன. தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவையும் இடம்பெற்றுள்ளது. பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி ஆகிய 4 தொகுதிகள் முடிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 5-வது தொகுதி திருச்சி, நெல்லை, வடசென்னை ஆகிய 3 தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கும்படி கேட்டு வருகிறது. கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

தூத்துக்குடி தொகுதியில் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரம் 5-வது தொகுதியாக திருச்சி, வடசென்னை, நெல்லை இதில் பா.ஜ.க.வுக்கு வாய்ப்புள்ள ஏதாவது ஒரு தொகுதி கிடைக்கும் பட்சத்தில் அந்த தொகுதியை டாக்டர் தமிழிசை கேட்கவும் வாய்ப்பு இருக்கிறது. திருச்சியில் போட்டியிட பரிசீலிப்பதாகவும் கூறப்படுகிறது.

திருச்சி தொகுதியை கருப்பு முருகானந்தம் கேட்கவும் வாய்ப்பு உள்ளது. நெல்லை தொகுதி ஒதுக்கப்பட்டால், அங்கே முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிட வாய்ப்பு கேட்பார் என்றும் பா.ஜ.க. வட்டாரம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பட்டியல் ஓரிரு நாளில் வெளியாக இருக்கிறது.

தூத்துக்குடி தொகுதியை பொறுத்தவரையில் தி.மு.க. சார்பில் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பே தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. சார்பில் அங்கு பிரசார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் தூத்துக்குடியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. தூத்துக்குடியில் 2 பெண் வேட்பாளர்கள் மோதுவது ஆரோக்கியமானது என்று அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.