Templates by BIGtheme NET
stock-market

பங்கு வேண்டாம்… தங்கம், ரியல் எஸ்டேட் போதும் தயக்கத்தில் ஒதுங்கும் தமிழக மக்கள்

புதுடெல்லி: இந்திய மக்களுக்கு தங்கம், நிலத்தின் மீதுதான் ஆர்வம் அதிகம். இதனால்தான் பாரம்பரியமாக இவற்றில் முதலீடு செய்வதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். தேசிய பங்குச்சந்தையில் முதலீடு தொடர்பாக நகரம் வாரியாக உள்ள புள்ளி விவரத்தின்படி, கடந்த ஆண்டு சென்னை மக்கள் ரூ.52,869 கோடியை முதலீடு செய்திருந்தனர். இது இந்த ஆண்டு ரூ.52,441ஆக குறைந்து விட்டது. 2014-15ல் இந்த முதலீடு ரூ.1.08 லட்சமாக இருந்தது. இரண்டு ஆண்டுகளில் முதலீடு பாதியாகிவிட்டது. மும்பை பங்குச்சந்தையில் 2014-15ல் சென்னை மக்கள் ரூ.8,232 கோடி முதலீடு செய்தனர். இது 2015-16ல் 16 சதவீதம் சரிந்து ரூ.6,294 ஆக குறைந்து விட்டது.

தென்னிந்திய மக்கள் பங்குச்சந்தை திட்டங்களில் முதலீடு செய்வதை தவிர்த்து வருகின்றனர். மேற்கு மண்டலத்தில் இருந்து 50 சதவீத முதலீடு வருகிறது. ஆனால் தென்னிந்தியாவில் இருந்து 7 சதவீதம் பேர் மட்டுமே பங்குகளில் முதலீடு செய்கின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மண்டல மக்கள் 26 சதவீதம் முதலீடு மேற்கொள்கின்றனர். ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தின்படி தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழக மக்கள் தங்கள் சேமிப்பில் 60 சதவீதத்தை ரியல் எஸ்டேட் துறையில்தான் முதலீடு செய்கின்றனர். 30 சதவீதம் தங்கத்திலும் 3 சதவீதம் மட்டுமே பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்கின்றனர். இதுபோல் கடன் வாங்குவதிலும் 40 சதவீதம் தங்க நகை கடன்களாகவே உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

மிக குறைந்த அளவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் கூட நேரடியாக செய்வதில்லை. சீட்டுப்பணம் கட்டுவது போல மாதாந்திர அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் சிப் திட்டங்களிலும், மியூச்சுவல் பண்ட்களிலும் முதலீடு செய்யவே விரும்புகின்றனர். திடீரென அதிக லாபம் கிடைத்தாலும், ரிஸ்க் எடுத்து தங்கள் மூலதனத்தை இழக்க அவர்கள் தயாராக இருப்பதில்லை என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

முடிந்து போன பெருமை: மும்பை, தேசிய பங்குச்சந்தைகளை போல சென்னை பங்குச்சந்தை (எம்எஸ்இ) 1937ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதில் 1,785 நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட்டிருந்தன. இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) 2012 மே மாதம் புதிய விதிமுறை கொண்டு வந்தது. இதன்படி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிகர சொத்து மதிப்பு ரூ.100 கோடியாகவும், ஆண்டு வர்த்தகம் ரூ.1,000 கோடியாகவும் இருக்க வேண்டும். இந்த இலக்கை எட்ட முடியாததால், 2015 ஜூன் மாதத்துடன் மூடப்பட்டு, 78 ஆண்டு பயணத்தை நிறுத்திக்கொண்டது சென்னை பங்குச்சந்தை. தற்போது, பங்குச்சந்தை என்றாலே பயப்படும் அளவுக்கு சென்னை மக்களின் முதலீடு சரிந்து விட்டது.

சென்னை மக்களின் பங்குச்சந்தை முதலீடு
ஆண்டு மும்பை
பங்குச்சந்தை தேசிய
பங்குச்சந்தை
(ஆண்டு வர்த்தகம் கோடி ரூபாயில்)
2012-13 ரூ.2,859 ரூ.39,045
2013-14 ரூ.3,173 ரூ.37,069
2014-15 ரூ.8,232 ரூ.1,08,484
2015-16 ரூ.6,294 ரூ.52,869
2016-17 ரூ.6,905 ரூ.52,441

தேசிய பங்குச்சந்தை முதலீடு
தரவரிசை நகரம் மதிப்பு (கோடி ரூபாயில்)
1 மும்பை 30,32,164
2 டெல்லி 3,39,123
3 பெங்களூரு 3,18,736
4 கொல்கத்தா 2,42,177
5 குர்கான் 2,12,170
6 ஐதராபாத் 1,81,208
7 அகமதாபாத் 1,51,122
8 காசியாபாத் 1,11,695
9 அரியானா 91,282
10 கொச்சி 54,529
11 சென்னை 52,441

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*