Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 301 புள்ளிகள் அதிகரிப்பு
bse

பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 301 புள்ளிகள் அதிகரிப்பு

உள்நாட்டு நிதி நிறுவனங்களின் பங்களிப்பால் பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின்போதும் காளையின் ஆதிக்கம் காணப்பட்டது. இதனால், சென்செக்ஸ் 301 புள்ளிகள் அதிகரித்து 33,000 புள்ளிகளை கடந்தது.
குஜராத் சட்டசபை தேர்தல் குறித்து வெளியான கருத்து கணிப்பு முடிவுகளில் பா.ஜ.க. வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலித்து மத்தியில் நிலையான அரசு அமைய வழிவகுக்கும் என்ற நிலைப்பாட்டால், உள்நாட்டு நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் ஆர்வத்துடன் தங்களது முதலீட்டை அதிகரித்தன.
சீன பொருளாதார புள்ளிவிவரங்கள் குறித்த எதிர்பார்ப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு பொதுப் பணி திட்டங்களில் பெரிய அளவில் முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது ஆகியவற்றால் ஐரோப்பா மற்றும் பெரும்பாலான ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இது, இந்திய பங்குச் சந்தைகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்தது.
முதலீட்டாளர்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை 2.23 சதவீதம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, உலோகம் 1.36 சதவீதமும், மருந்து 1.35 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 1.15 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 1.02 சதவீதமும், மோட்டார் வாகனம் 0.97 சதவீதமும், வங்கி 0.92 சதவீதமும், ரியல் எஸ்டேட் துறை 0.72 சதவீதமும் அதிகரித்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில் ஐடிசி நிறுவனப் பங்கின் விலை 3.44 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 2.21 சதவீதமும் ஏற்றம் கண்டன.
இவை தவிர, ஸன் பார்மா, ஹெச்யுஎல், சிப்லா, ஓஎன்ஜிசி, மாருதி சுஸýகி, ஹெச்டிஎப்சி வங்கி, பார்தி ஏர்டெல், ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி நிறுவனம், டாடா ஸ்டீல் பங்குகளின் விலை 2.21 சதவீதம் வரை அதிகரித்தன.
அதேசமயம், லாப நோக்கம் கருதி விற்பனை செய்ததையடுத்து, ஹீரோ மோட்டோகார்ப், பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஏஷியன் பெயிண்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் நிறுவன பங்குகளின் விலை சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 301 புள்ளிகள் அதிகரித்து 33,250 புள்ளிகளாக நிலைத்தது. வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 352 புள்ளிகள் ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 98 புள்ளிகள் உயர்ந்து 10,265 புள்ளிகளாக நிலைத்தது.