Home » குமரி செய்திகள் » நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்துகுமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையால் பரபரப்பு
image 1

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்துகுமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையால் பரபரப்பு

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து குமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 4 மணி நேரம் காத்திருக்க வைத்ததால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பஸ்கள் இயக்கம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் தமிழகம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

68 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அரசு பஸ்கள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டன. ஆனாலும் குமரி மாவட்டத்தில் நேற்று முதல்தான் பஸ்கள் ஓட தொடங்கின.

பயணிகளுக்கு அதிர்ச்சி

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி குமரி மாவட்டத்தில் பஸ்களில் பயணிகள் ஏற அனுமதிக்கப்பட்டனர். குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சென்ற பயணிகள் உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றனர். அவர்களுக்கு எந்தவொரு தடங்கலும் இல்லை.

ஆனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனை சாவடி வந்ததும், பஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அதில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறங்க சொல்லி, சோதனை சாவடியில் இருந்த சுகாதார அதிகாரிகளிடம் பெயர், முகவரியை பதிவு செய்யும்படி கூறினர்.

கொரோனா பரிசோதனை

அதன்பிறகு பஸ்சில் வந்த பயணிகள் அனைவரும் அருகில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கொரோனா பரிசோதனையாக பயணிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஒரு பஸ்சில் 30 பேர் வந்தால், அனைவருக்கும் சளி மாதிரி எடுத்த பிறகு தான் அந்த பஸ் புறப்பட அனுமதிக்கப்பட்டன.

இதனால் பெயர்களை பதிவு செய்து, கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கும் வரை பயணிகள் ஒவ்வொருவரும் சுமார் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியது இருந்தது. காலை 10 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக வந்த அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியாததால் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

அதிகாரி முற்றுகை

அப்போது அங்கு குமரி மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) ராஜாமணி இருந்தார். அவரை பயணிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பயணிகள், ‘அரசு இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று கூறியதால்தான் நாங்கள் பஸ்களில் புறப்பட்டு வந்தோம். கார், இரு சக்கர வாகனங்களில் வருபவர்களை கூட பெயர்களை மட்டும் பதிவு செய்து விட்டு அனுப்பி வைக்கிறீர்கள். எங்களுக்கு மட்டும் கெரோனா பரிசோதனை என்ற பெயரில் இப்படி மணிக்கணக்கில் காத்திருக்க சொல்கின்றீர்கள். எங்களால் சரியான நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியவில்லையே என்று ஆவேசத்துடன் வாக்குவாதம் செய்தனர்.

அதற்கு அதிகாரிகள், எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் என்ன உத்தரவிட்டு உள்ளதோ, அதை தான் செய்கிறோம். எனவே அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை முதல் பகல் வரை மட்டும் பஸ்சில் வந்த 200-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நழுவிய பயணிகள்

அதே நேரம் பஸ்களில் வந்த பயணிகளில் பலர் நழுவி செல்வதில் குறியாக இருந்தனர். பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகளில் நாகர்கோவில் மற்றும் ஆரல்வாய்மொழி, தோவாளை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள், உறவினர்களை வரச்சொல்லி, அதில் ஏறி கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பி சென்றனர். மேலும் சிலர் சோதனை சாவடியில் இருந்து கொரோனா பரிசோதனைக்கு செல்லாமல் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு சென்று, அங்கிருந்து டவுன் பஸ்சில் ஏறி நாகர்கோவிலுக்கு செல்வதையும் காண முடிந்தது.

மேலும் பயணிகளை பரிசோதனைக்காக இறக்கி விட்டதும், அரசு பஸ்கள் ஆரல்வாய்மொழி பஸ் நிலையத்துக்குள் கொண்டு போய் நிறுத்தப்பட்டன. பயணிகள் பரிசோதனை முடிந்து வந்ததும் அவர்களை ஏற்றி கொண்டு பஸ் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.